திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு 167 பணியிடங்களை உருவாக்க அரசு அனுமதி: செலவினங்களுக்கு 30 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களும், திருநெல்வேலியை பிரித்து தென்காசி மாவட்டமும், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும் என மொத்தம் 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கலெக்டர், டிஆர்ஓ, உதவி கலெக்டர், 2 தாசில்தார்கள், டெபுடி தாசில்தார்(எச்ஏ), முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 14, இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 12 பேர் உட்பட மொத்தம் 167 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம் வருவாய் கோட்டங்களுக்கு தலா 12 அலுவலர்கள் நியமித்துக் கொள்ளவும், புதிதாக உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தாலுகாவுக்கு 36 அலுவலர்களை நியமித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பேரிடர் மேலாண்மைத்துறையில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு நிர்வாக செலவினங்களுக்கு 12 கோடியே 95 லட்சத்து 66 ஆயிரத்து 166ம், நிர்வாகம் அல்லாத தளவாடங்கள், உபகரணங்கள் வாங்க 2 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 188ம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நிர்வாக செலவினங்களுக்கு 12 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 486ம், நிர்வாகம் அல்லாத தளவாடங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காக 2 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரத்து 188ம் ஒதுக்கப்பட்டுள்ளது
அதேபோல் அரக்கோணம், வாணியம்பாடி, குடியாத்தம் வருவாய் கோட்டங்களுக்கு தலா 8 கோடியே 91 லட்சத்து 520 ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தாலுகாவுக்கு நிர்வாக செலவினங்களுக்கு 1 கோடியே 88 லட்சத்து 20 ஆயிரத்து 120ம், நிர்வாகம் அல்லாத தளவாடம், உபகரணங்களுக்காக 20 லட்சத்து 37 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment