ஆசிரியர் பகவானை யாரும் மறந்திருக்க முடியாது. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான இவரை கடந்த வருடம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டபோது அவரை மாற்றக் கூடாது என மாணவர்கள் அழுதுபுலம்பிய காட்சி வைரலானது.
இடுக்கி மாவட்டம் கரிங்குன்னத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தவர் கேஆர் அம்ரிதா.
தற்காலிக ஆசிரியையான இவர்மீதும் இன்னொரு ஆசிரியை மீதும் சமீபத்தில் அந்தப் பகுதி கல்வி அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது. மாணவர்களை இவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்ற அந்தப் புகாரை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அம்ரிதா உட்பட இரண்டு தற்காலிக ஆசிரியைகளும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதற்கான ஆர்டரை கையில் வாங்கிய அம்ரிதா அந்த இடத்திலேயே அழுதுள்ளார். பின்பு பள்ளிக்கூடத்தை விட்டு புறப்பட தயாரானபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆசிரியை அம்ரிதா பள்ளியை விட்டுச் செல்வதை அறிந்து மாணவர்கள் அவரை தடுக்க முற்பட்டனர். ஒருகட்டத்தில் மாணவர்களும் அழுதுகொண்டே ``எங்களை விட்டு போகாதீர்கள் டீச்சர்" எனக் கத்திக்கொண்டே இருக்க அங்குள்ளவர்களை இந்தக் காட்சி நெகிழவைத்தது.
கூடவே, ``அம்ரிதா டீச்சர் ஒருபோதும் எங்களை அடித்ததில்லை. அவர் எங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்" எனக் குழந்தைகள் மீடியா முன்பு பேசும்போது அங்கிருந்த ஆசிரியர்கள் சிலரும், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் அவர்களை தடுத்துள்ளனர். ஊடக நபர்களையும் தாக்கி, அவர்களிடம் இந்தக் காட்சியை படம்பிடித்த கேமராவைத் தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அங்கு சிறிதுநேரம் குழப்பம் ஏற்பட்டது. ``ஆசிரியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சிலர் என்மீது தொடர்ந்து பொய்ப்புகார் கூறிக்கொண்டே இருந்தனர். என்னை மனரீதியாக துன்புறுத்திய மூத்த ஆசிரியர்கள் கல்வி அதிகாரிக்குப் புகார் கொடுத்துள்ளனர்" என ஆசிரியை அம்ரிதா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். ஆனால், அதை மறுத்துள்ள கல்வி அதிகாரி ``அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் 17 புகார்கள் வந்துள்ளன.
மாணவர்கள்
விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெளிவாகிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். ஆசிரியைக்காக மாணவர்கள் அழுத வீடியோ வைரலாக சோஷியல் மீடியாவில் உள்ளவர்கள் ஆசிரியைக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் செய்த தவறு குறித்து மீண்டும் உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


No comments:
Post a Comment