பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பழங்குடியினர்உண்டு உறைவிடப் பள்ளி சார்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 2 சிறியரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த எலந்த கோட்டப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அறிவியல் வகுப்புகளில், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பல பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் இரண்டு வகையான சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு கும்பகோணத்திலிருந்து பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 200 அடி உயரத்திற்கு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய ரக ராக்கெட்டுகளில் ஒன்று சாதாரணமாகவும், மற்றொன்று பாராசூட் பொருத்திய நிலையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் விண்ணில் உள்ள தட்பவெப்ப நிலைகளை மொபைலுடன் இணைத்து அந்த சூழலை தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருந்தது.
பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கோயில் மைதானத்தில் மாணவர்கள் முன்னிலையில் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன.மலை கிராம மாணவ-மாணவிகள் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுவதை கண்டு மிகுந்த உற்சாகமடைந்தனர். மேலும், கிராம மக்களும் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தனர். இந்த கண்காட்சியில் மற்ற பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment