அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக கரும்பலகையே நடைமுறையில் உள்ளது. வரும் பிப்., மாதத்துக்குள், 72 ஆயிரம் பள்ளிகளில், 'ஸ்மார்ட் போர்டு' வசதி செய்யப்பட உள்ளது. பின், 7,200 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும்.மேலும், 1,000 வார்த்தைகளை கொண்டு, மாணவ - மாணவியர் சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும்.
ஒரு மாணவன், இன்னொரு மாணவனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் போது, அதில் தவறு இருந்தால், ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து, பயிற்சி அளிப்பர்.பள்ளிக்கல்வித் துறையின் நலத் திட்டங்களால், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைஅதிகரித்து வருகிறது. இதுவரை, 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.அடுத்த கல்வியாண்டில், இது, 3 லட்சமாக உயரும்.தமிழகத்தில், 7,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். சில பாடங்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் இல்லாதநிலை உள்ளது.
விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும். பிப்., மாதத்துக்கு மேல், தனியாரை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment