தேர்வுக்கு முன்பு வெளியாவதை தவிர்க்க 10, 11, 12-ம் வகுப்பு வினாத்தாளை நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்ப கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் அனைத்துவகை பள்ளிகளிலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு ஒரே வினாத்தாள் பயன்படுத்தப்படுகிறது.
சமீபகாலமாக காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. தற்போது நடந்த அரையாண்டு தேர்விலும் 10, 11-ம் வகுப்புகளுக்கான சில பாடங்களின் வினாத்தாள்கள் முன்னதாக ஷேர்சாட், ஹாலோ போன்ற செயலிகள் வழியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இதுகுறித்து திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க, இனிமேல் வினாத்தாளை பள்ளிகளுக்கு நேரடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக, அனைத்து வகுப்புகளுக்கும் மாவட்டவாரியாக வினாத்தாள் தயாரிக்கப்படும். பொதுத் தேர்வு நடைபெறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும்காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு வினாத்தாளை தேர்வுத்துறை வடிவமைக்கும். இந்த வினாத்தாள்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். வினாத்தாளை அச்சிட மண்டல வாரியாக தனியார் அச்சகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த அச்சகங்களில் வினாத்தாளை அச்சிட்டு மாவட்ட கல்விஅதிகாரிகள் மூலம் 15 பள்ளிகளுக்கு மையமாக இருக்கும் 'நோடல்' பள்ளிகளில் ஒப்படைக்கப்படும். தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பாளர்கள் வினாத்தாளை பெற்றுச் செல்வார்கள்.
குறைந்த மாணவர்கள் படிக்கும் சில தொழிற்பிரிவு பாடங்களுக்கு மட்டும் வினாத்தாள் நேரடியாக பள்ளிகளுக்கு குறுந்தகடு மூலம் அனுப்பப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவார்கள்.
இதற்கிடையே, ஏதேதோ காரணங்களை கூறி நோடல் மையங்களில் இருந்து சில தனியார் பள்ளிகள் மொத்தமாக வினாத்தாளை வாங்கி சென்றுவிடுகின்றன. அத்தகைய தனியார் பள்ளிகளில் இருந்துதான் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாக வாய்ப்புஉள்ளது. மேலும், தனியார் அச்சகங்கள் மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதற்கு மாற்று ஏற்பாடாக 10, 11, 12-ம் வகுப்பு வினாத்தாள்களை இனி நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி தேர்வுக்கு 2 மணி நேரம் முன்புதான் பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படும். அதைதலைமை ஆசிரியர்கள் உடனடியாக நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஜனவரியில் நடக்க உள்ள திருப்புதல் தேர்வின்போது இந்தநடைமுறையை பின்பற்ற பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, பிரின்டர், இணையதள வசதிகள் ஏற்கெனவே உள்ளன. எனவே, தலைமை ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்காது. கூடுதல் தேவைகள் இருப்பின் விரைவில் சரிசெய்யப்பட்டு, வினாத்தாள் வெளியாவது அடுத்த ஆண்டு முதல் முற்றிலுமாக தடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்
No comments:
Post a Comment