பள்ளிக்கூடம் என்பது வெறுமனே பக்கம் பக்கமாக புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மட்டுமே சொல்லிக்கொடுப்பதற்காக அல்ல; மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுப்பதும் பள்ளியின் பணிதான். அந்தவகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆசிரியர் ஒருவர் எடுத்திருக்கும் முயற்சி பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. பள்ளியின் வேளாண் தொழிற்கல்வி ஆசிரியராக இருப்பவர் கந்தன். இவர் பள்ளி வளாகத்திலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடத்தில் விளக்கியதோடு, `பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்தால் பிஸ்கட், பொரியுருண்டை கிடைக்கும்' என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
ஆர்வமாகக் களத்தில் இறங்கிய மாணவர்கள், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக பள்ளி வளாகத்தை மாற்றியிருக்கின்றனர்.
பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் மாணவர்கள்
தினமும் மதிய உணவு இடைவேளையின் போது பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வரும் மாணவர்கள், வரிசையாக நின்று ஆசிரியர் கந்தனிடம் அதைக் கொடுத்து பிஸ்கட்டையும் பொரியுருண்டையையும் வாங்கிச் செல்கின்றனர். `இதெல்லாம் நாங்க போட்ட குப்பைங்க தானே! எங்க ஸ்கூல்ல இருக்க குப்பைகளை நாங்க எடுக்கிறதுல ஒரு சங்கடமும் இல்ல!' என்ற மாணவர்களிடம் பெரும் புரிதலைப் பார்க்கமுடிந்தது.
இந்த முயற்சியை முன்னெடுத்த வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர் கந்தனிடம் பேசினோம். ``சூழல் மேம்பாட்டிற்கு ஒவ்வொரு தனி மனிதனின் ஒத்துழைப்பும் அவசியம். குறைந்தபட்சம் நம்முடைய சுற்றுப்புறத்தையாவது தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாணவர்களிடம் தெளிவாக விதைக்க வேண்டும். அந்தவகையில், எங்களுடைய பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை, ஆர்வத்தோடு மாணவர்களே முன்வந்து அகற்ற வேண்டுமென நினைத்தேன். அதற்கு ஒரு சிறிய ஊக்கமாகத்தான், 'பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் பிஸ்கட் தரப்படும்' எனச் சொன்னேன். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து இதை செய்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் இப்போது பிளாஸ்டிக் குப்பைகளையே காண முடியவில்லை.
பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் மாணவர்கள்
குறைந்தபட்சம் 10 பிளாஸ்டிக் குப்பைகளையாவது கொண்டு வந்தால்தான் பிஸ்கட் கிடைக்கும் என்றதால், பள்ளி வளாகத்திற்கு வெளியிலிருக்கும் பிளாஸ்டிக்கையும் பசங்க கொண்டுவர ஆரம்பிச்சிட்டாங்க. `சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை அகற்றுவதே பெரிய விஷயம்' என மாணவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்த ஆரம்பித்தேன். பிளாஸ்டிக் உண்டாக்கும் கேடுகள் குறித்து மாணவர்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறேன். இப்போது, ஒரு சாக்லேட் பேப்பரைக் கூட மாணவர்கள் கீழே போடுவதில்லை. நான் கொடுக்கும் கடலை மிட்டாய், பொரி உருண்டை, பிஸ்கட்டிற்காக அல்லாமல் தன்னார்வத்தோடு செயல்படும் மாணவர்களைப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது" என்றார்.
No comments:
Post a Comment