எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சட்ட உண்மை!

Saturday, December 7, 2019




குழப்பமே உன் பேர்தான் உள்ளாட்சித் தேர்தலோ என்று கேட்கும் அளவுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பல பேர் பலவிதமாக கருத்துகளைச் சொல்லிவருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று (டிசம்பர் 6) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 2ஆம் தேதி தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாகவும், உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு விதி-6 ஐ பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தும்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாது என்பதுதான் சட்ட ரீதியான உண்மை என்கிறார்கள் இந்த வழக்கு விசாரணையையும், தீர்ப்பையும் நன்கு ஆராய்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

“9 மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த முடியாது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள்தான் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டவை. இந்த மாவட்டங்களில் மறுவரையறையும், இட ஒதுக்கீடும் செய்யாமல் தேர்தல் நடத்த முடியாது.

எனவேதான் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாகவும், அந்த 9 மாவட்டங்களுக்கும் 4 மாதத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதில் இன்னொரு சட்ட அம்சம் இருக்கிறது. மறுவரையறை என்பது இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக செய்யலாம். ஆனால், பிரிவு 6 இன் படி இடஒதுக்கீட்டை முழுமை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது. அந்த வகையில் தமிழ்நாடு என்கிற ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரே அலகாகக் கருதிதான் இட ஒதுக்கீட்டினை வரையறுக்க முடியும். எனவே இந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்த மாநிலத்தின் பிறபகுதிகளை ஒரு அலகு என்றும், 9 மாவட்டங்கள் தனியாக ஒரு அலகு என்றும் கருதினால் அது இட ஒதுக்கீட்டின் அடித்தளத்தையே பாதிக்கும். 9 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக இட ஒதுக்கீடு செய்ய முடியாது. ஒட்டுமொத்த மாநிலத்தின் மக்கள் தொகை, அதில் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பட்டியலின ஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை அமல்படுத்தப்படவேண்டும். அதற்குள்தான் இந்த 9 மாவட்டங்களும் வரும்.

இதை உணர்த்தும் விதமாகத்தான் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஒன்பது மாவட்ட வரையறை முடித்து புதிய தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறது.

வார்டு வரையறை என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலுக்குள் புதிதாக இணைக்கப்படும் நிலையில் பத்து வருடத்துக்கு ஒருமுறை வார்டு மறு வரையறை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட வார்டின் மக்கள் தொகை, மக்களின் கருத்துகள், ஒரே நிலப்பரப்பு, (உதாரணத்துக்கு மலையடிவார பகுதியும் மலைமேல் உள்ள பகுதியும் ஒரே வார்டில் வர முடியாது), ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியோ குவிந்துவிடக் கூடாது போன்ற காரணிகளை வைத்துதான் வார்டு வரையறை செய்யவேண்டும்.

இந்த வகையில் குறிப்பிட்ட இந்த 9 மாவட்டங்களுக்கும் வார்டு வரையறைப் பணிகளை முடித்த பிறகுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் ஒரே அலகாகக் கருதி இட ஒதுக்கீடு வரையறுக்க முடியும்.

வார்டு வரையறைப் பணிகள் என்பது மனித சக்தி மூலமாக செய்வதற்குத்தான் நீண்ட காலம் பிடிக்கும். இப்போதைய கணினி, தொழில் நுட்பக் காலத்தில் 9 மாவட்டங்களுக்கும் வார்டு வரையறை செய்வதற்கு 3 மாதங்கள் போதும். ஆனால் உச்ச நீதிமன்றமோ 4 மாத அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் மறு வரையறைப் பணிகளை முடித்துவிட்டு அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் இட ஒதுக்கீட்டு வரையறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும். இதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சட்ட ரீதியான சாராம்சம். ஆனால் 9 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக வரும் தகவல்கள் சட்ட அடிப்படையற்றவை.

எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 9 மாவட்டங்களுக்கும் வார்டு வரையறைப் பணிகளை 4 மாதத்துக்குள் முடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் இட ஒதுக்கீடு வரையறையை நிறைவு செய்தால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும்” என்று விளக்குகிறார்கள்.

இதை உச்ச நீதிமன்றத்திடமே முறையிட்டுத் தெளிவுபெறுவதற்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.

1 comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One