எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையா? - முனைவர் மணி கணேசன்

Friday, January 31, 2020




ஆட்டைக் கடித்து மாட்டைப் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இருக்கிறது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒரு பகுதியாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அவசியம் எனும் பரிந்துரை ஆகும். இன்றளவும் அவ்வரைவு சட்டமாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் மத்தியில் ஆளும் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் கூட மாநில அரசியல் நிலவரங்களையும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு மெல்ல வேறுவழியின்றி நிறைவேற்ற முன்வருவது கண்கூடு. அதேவேளையில் தமிழக அரசு முந்திக்கொண்டு முதலாவதாக எதைப்பற்றியும் யோசிக்காமல் பொதுமக்கள், அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் விரோத தீங்கு விளைவிக்கும் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றத் துடிப்பதென்பது புரியாத புதிர் ஆகும்.

அந்த வகையில் பொதுமக்களின் வாழ்வாதாரங்களைப் பெரிதும் பாதிக்கும் எட்டுவழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் முதலான திட்டங்களும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை உரிமையாக காலங்காலமாக இருந்துவந்த ஓய்வூதியம் சார்ந்த நடைமுறைகளைக் குழிதோண்டி புதைத்து பங்களிப்பு ஓய்வூதியம் எனும் வயோதிக காலத்தில் ஒன்றுக்கும் உதவாத திட்டத்தை மத்திய அரசு ஏப்ரல் 2004 இல் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே 2003 இல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது காலக் கொடுமை எனலாம்.

இத்தகு அசாதாரண சூழலில் குழந்தைகள் மீதான வன்முறைகளுள் தலையாயதாக விளங்குவன தேர்வு நடைமுறைகளே! தேர்வுகள் தேவையில்லை என்பது குழந்தை உளவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் இன்றியமையாதக் கருத்தாகும். தேர்வுகள் குழந்தைகளின் உளவியலைப் பெரிதும் பாதிக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. தேர்வுகள் அனைத்தும் கற்றல் அடைவுத் திறனையும் திறனறிவையும் முழுமையாக மதிப்பீடு செய்ய முன்வருவதில்லை. மாறாக, நினைவாற்றலையும் பாடப்புத்தகங்களில் காணப்படும் விடைகளை அப்படியே நகலெடுத்து எழுதும் எழுத்தாற்றலையும் சோதித்து அறிவதையே தலையாய வேலையாகக் கொண்டுள்ளது வேதனைக்குரியது.

மதிப்பெண்களால் மட்டுமே மாணவர்கள் அறியப்படுகின்றனர். தனித்திறன்களுக்கும் திறமைகளுக்கும் வேலையில்லை. குறிப்பாக, நடைமுறையில் உள்ள 10 முதல் 12 வகுப்பு முடிய உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பலர் கூக்குரல் கொடுத்து வருவது அறிந்ததே. கற்றல் குறைபாடுகள் மிக்க மாணவர்களின் நலனை முற்றிலும் புறந்தள்ளி நல்ல உடல்நலம் மற்றும் மனநலம் படைத்த ஏனைய மாணவர்களுடன் பொதுத்தேர்வு நடைமுறைகளைத் தொன்றுதொட்டு திணித்து வருவதென்பது பல்வேறு எதிர்வினைகளைத் தோற்றுவிக்கிறது.

இந்நிலையில் அண்மையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்னும் பேரிடி குழந்தைகளின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் முதலானோர் அறவழியில் காட்டும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் கவலைகள் குறித்து நடுவுநிலையுடன் சிந்திக்காமல் முன்வைத்த காலைப் பின்வைக்க மனமில்லாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவதென்பது அரசுக்கு நல்லதல்ல.

குறும்புத்தனங்களும் குழந்தைப் பண்புகளும் ஒருங்கே நிறைந்த பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் ஒன்றும் பரிசோதனைக் கூட எலிகளல்லர். உடலளவிலும் மனதளவிலும் பள்ளியளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வுகளுக்குத் தம்மைத் திறம்பட தயாரித்துக் கொள்ள இயலாதக் குழந்தைகளைப் பொதுத்தேர்வு எனும் பாறையைப் சுமையாக்குவது தகாத செயலாகும். ஆயிரம் சமாதானம் அரசிடமிருந்து கூறப்பட்டாலும் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு முடிவென்பது குழந்தைமையை முற்றாக அழித்தொழிக்கும் கொடுஞ்செயல் என்பது உண்மை. அரசுக்கு வருவாயைப் பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அரசு மதுபானக் கடைகளால் குடி நோயாளிகளின் எண்ணிக்கை மிகுந்தது போல் பொதுத்தேர்வு முறையால் பள்ளி இடைநிற்றல் மிகுதியாகும் அவலம் தமிழ்ச் சூழலில் மிகும். இதனால் குழந்தைகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிக் கல்வியைக் தொடர முடியாமல் படிப்பை வெறுத்தொதுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். ஏனெனில், படிப்பில் தோல்வி என்பது மாணவனை வெகுவாகப் பாதிக்கும். தோல்விக்குப் பின், மீளப் பள்ளி வருவதையும் அவனைக் காட்டிலும் வயது குறைந்த மாணவனுடன் மற்றுமொரு முறை கல்விப் பயணம் மேற்கொள்வதையும் விரும்பாமல் பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் விரும்பத்தகாத செயல்களை நாடி ஓடும் அவலநிலைக்குக் குழந்தைகள் ஆட்படுவது நிகழக் கூடும்.

குறிப்பாக, தமிழகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளும் ஓராசிரியர்கள் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் பரிதாபப் பள்ளிகளும் நிரம்ப உள்ளன. குக்கிராமங்களில் காணப்படும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பைக் கடக்கும் முதல் தலைமுறை மாணாக்கர்கள் பாமரப் பெற்றோர் துணையும் ஆதரவுமின்றித் தம் பள்ளிக்கல்வியை முயன்று தவறித் தொடரும் போக்குகள் இன்றும் மலிந்து காணக் கிடைக்கின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளிகள் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விளிம்புநிலையினர், பட்டியல் இனத்தவர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைக் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோருடன் வசிக்கும் பிள்ளைகள், அநாதைகள் குழந்தைகள் போன்றோரின் புகலிடமாக இப்போதும் இருந்து வருவது கண்கூடு. இத்தகையோர் தொடக்கக்கல்வியைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவு செய்திட வேண்டும் என்று கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழங்குவதன் குரல்வளையை நெரிப்பது ஆகாதா கட்டாய இப்பொதுத்தேர்வு அறிவிப்பு?

பின்லாந்து உள்ளிட்ட கல்வியில் தலைசிறந்து விளங்கும் நாடுகளில் காணப்படும் கல்விமுறைகளை வியந்து போற்றினால் மட்டும் போதாது. கல்வியிற் சிறந்த ஒளிரும் தமிழகத்தை இருண்ட காலத்திற்கு இதுபோன்ற குழந்தைகள் விரோத பொதுத்தேர்வு அறிவிக்கைகள் அழைத்துச் செல்வது உறுதி. மாணவர்களின் அறிவு வளர்ச்சி பிறப்பு தொட்டு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது வேறுபடும். தொடக்க நிலையில் சுமாராகப் படித்த பல குழந்தைகள் உயர்நிலை வகுப்பில் சிறப்பிடம் பெற்றதும் உயர் தொடக்க நிலையில் அதிக கவனம் தேவைப்படும் நிலையிலிருந்த பள்ளிப் பிள்ளைகள் மேனிலைக் கல்வியில் முதன்மை அடைந்ததும் அறியக் கிடைப்பதாகும். குறிப்பாக, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுறும் பெண் குழந்தைகள் மீளப் பள்ளி வருவதென்பதும் விட்டப் படிப்பைத் தொடருவதென்பதும் இயலாதது.

எதிர்ப்புக் குரல்களை எதிரிகளின் குரல்களாக நோக்கும் குறுகிய பார்வையினை முதலில் ஆட்சியாளர்கள் கைவிடுதல் நல்லது. மனித வளம் எப்போதும் மகத்தானது. தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு அறிவார்ந்த முறையில் வாழ்ந்து வரும் உயரிய உன்னத சமூகமாகும். வழக்கொழிந்து போன குருகுலக்கல்விக்குப் புத்துயிர் ஊட்டவே இது போன்ற அபத்த அறிவிப்புகள் அடிகோலும்!  எதிர்வரும் காலங்களில் பணம் படைத்த, ஏட்டுக் கல்வியில் வெறும் தேர்ச்சி பெற்ற, சுய சிந்தனைகளுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, தேர்வுகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட பொன்சாய்க் குழந்தைகள் பள்ளிகளில் பல்கிப் பெருகுவது வளமான தமிழகத்திற்கும் வலிமையான வல்லரசு இந்திய நாட்டிற்கும் நல்லதல்ல. குழந்தைகளை இயல்பாக வாழவும் வளரவும் விடுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அறிவுக் கண்ணைத் திறக்க கல்வி அவசியம். மதிப்பெண்களை விட மாணவர்களுக்கு மதிப்புமிகு எண்ணங்களே அவர்களுடைய நல்வாழ்க்கைக்கு அடிப்படை. பிஞ்சுக் குழந்தைகள் எதிர்பார்ப்பது பாதுகாப்பான நல்வாழ்வு. பட்டாம்பூச்சி முதுகில் பாறாங்கல் சுமையாக விளங்கும் பொதுத் தேர்வல்ல! குழந்தைகளின் நலன் கருதி பொதுத்தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்து நல்லதொரு முடிவை விரைந்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்திட முன்வருவதே புதியதொரு தொடக்கம் ஆகும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One