பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.கறுப்புப் பணத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனால், புதிதாக அறிமுகம் செய்த, 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனால், 'எப்போது வேண்டுமானாலும், 2,000 ரூபாய் நோட்டை செல்லாது என, மத்திய அரசு அறிக்கும்' என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இன்று காலையிலிருந்து, சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும், இந்தியன் வங்கி வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பரிவர்த்தனையை நிறுத்தவுள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன.
இதனால், பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.இந்நிலையில், இந்திய வங்கி ஊழியர் சங்க, அகில இந்தியச் செயலர் (BEFI) கே.கிருஷ்ணன் கூறியதாவது:ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பவர்கள், 4,000, 6,000 என, எடுத்தால், முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர்.ஏ.டி.எம்., கொண்டுவந்த அடிப்படை நோக்கம், வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கிக்கு வரக் கூடாது என்பது தான். ஆனால், அந்த நோக்கம் சிதைகிறது. எனவே, வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுக்களை, ஏ.டி.எம்.,களில் வைப்பதில்லை என, இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது.மார்ச் 1ம் தேதி முதல், இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,களில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ள 'டிரே' நிரப்பப்படாது. இதைப் புரிந்து கொள்ளாது அனைவரும் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment