புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் டாக்டர், வக்கீல், இன்ஜினீயர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏம்பல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு மட்டுமல்லாது கிராம வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பொதுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதால், ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கச் சிறப்பு வகுப்புகளைத் தொடங்கிவிட்டனர். மாலை நேர வகுப்புகள் நடப்பது பற்றி அறிந்த முன்னாள் மாணவர் ஒருவர், மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் சொந்தச் செலவில் மாலை நேரச் சிற்றுண்டி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அது தொடரவே, இன்று கிராம மக்களால், 3 நேரமும் சத்தான உணவு வழங்கும் திட்டமாக மாறி பொதுத் தேர்வு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பின்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி
இதுபற்றி முன்னாள் மாணவர்கள் கூறும்போது, ``பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் எல்லாப் பள்ளியிலும் 1 மணி நேரமாவது மாலையில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் எடுப்பாங்க. நீண்ட நேரம் பள்ளியில் இருக்காங்க. குறிப்பாக, மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் பெரும்பாலும், சோர்வடைந்து போயிடுவாங்க. அவர்களின் சோர்வைப் போக்குவதற்கு டீ, காபி, ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடும் போது கொஞ்சம் புத்துணர்ச்சியாக முடியும். நல்லா சாப்பிட்டு, உடம்பு ஆரோக்கியமா இருந்தால் தானே படிப்பிலயும் ஆர்வம் காட்ட முடியும். எங்களுக்கு எல்லாம் அந்தக் காலத்துல இதுமாதிரி எல்லாம் கிடைக்கல. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து இந்தப் பொதுத்தேர்வு மாணவர்களுக்குச் சிற்றுண்டி கொடுக்கலாம்னு நெனச்சு ஆரம்பிச்சோம். பாசிப்பயிறு, கொண்டக்கடலை, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்தோம்.
அதுக்கப்புறம், எங்க ஊர் கிராம மக்கள், தன்னார்வலர்கள் கிட்டயும் சொன்னோம் பலரும் மாணவர்களுக்கு உணவு வழங்க முன்வந்தனர். அதே நேரத்தில் காலை நேரத்திலயும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கலாம்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. `தாராளமாக வகுப்பு எடுங்க. முன்னாள் மாணவர்கள் கிராம மக்கள் சேர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கிறோம்'னு சொன்னோம். அதுபடி செஞ்சிக்கிட்டு வர்றோம். ஆசிரியர்களும் மாணவர்கள் மேல அக்கறையாக இருக்காங்க.
தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி
ஆசிரியர்களும் ரொம்ப நல்லாவே சப்போர்ட் பண்றாங்க. முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்கள், என கிராமத்தைச் சேர்ந்த பலராலும் இன்று தினமும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு என்பதால், எந்தவிதக் கோளாறு இல்லாமல், பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். தொடர்ந்து, இது நடக்கணும். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இதுவும் ஒரு முயற்சி என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். இதேபோல, ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் முயற்சி எடுக்கணும்" என்றனர்
No comments:
Post a Comment