ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக அரசின் சார்பாக 2019-ம் ஆண்டு அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன, போராட்டங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று காலை அறிவித்தார்.
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து ஆரம்பத்திலிருந்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்த எழுத்தாளர் விழியனிடம் பேசினோம்.
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஏன் இவ்வளவு குழப்பம்?
``உண்மையில் இது வரவேற்கத்தக்கது. கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருந்திருந்தாலும், நேரடியாக தேர்வு முறையை மாற்றியமைக்காமல், முதலில் பாடத்திட்டம், கல்வி முறை, பாடம் கற்பிக்கும் முறை போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதன்பின் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்றவுடன் மாணவர்கள் மட்டுமல்ல நிறைய பெற்றோர்கள் கூட மன அழுத்தத்தில் இருந்தார்கள்.
பொதுத்தேர்வு நடந்திருக்கும் பட்சத்தில் நிறைய மாணவர்களுக்குப் படிப்பு மீதும் பள்ளியின் மீதுமே வெறுப்பு வந்திருக்கும். குழந்தைகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளிகளும் குழந்தைகளை இயந்திரமயமாக்கி இருப்பார்கள். இது குழந்தைப் பருவத்திற்கு எதிரான மிகப்பெரிய அநீதியாக இருந்திருக்கும்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் பொதுத்தேர்வு ரத்து குறித்த அரசின் முடிவுக்கு நிறைய பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்" என்றார் மகிழ்ச்சியாக.
No comments:
Post a Comment