தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கணக்கீட்டின் படிதான் இனி மாதச்சம்பளம் வழங்கப்படும். காகித வருகைப்பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது என்று மாநகராட்சிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் இயங்கி வருகிறது. இதில் ஆணையர்கள், உதவிஆணையர்கள், பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், நகர்நல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் வருகைப்பதிவேட்டின் படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு குளறுபடிகள் மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது.
இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பயோமெட்ரிக் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் கருவியினை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், விரைவில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவினைக்கொண்டு, எத்தனை நாட்கள் பணிக்கு வந்துள்ளனர். எத்தனை நாட்கள் விடுமுறை, எத்தனை நாட்கள் அனுமதி பெற்று விடுமுறையில் சென்றுள்ளனர். பிஎப் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆன்லைன் மூலமாக கணக்கிடப்பட்டு, மாதச்சம்பளம் வழங்கப்படும். இதில் எந்தவிதமான முறைகேடுகளும் மேற்கொள்ள முடியாது. அத்தோடு காகித வருகைப்பதிவேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment