மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் மாற்ற ஃபோரியர் ட்ரான்ஸ்பார்ம் (Fourier Transform) அல்லது லேப்லாஸ் ட்ரான்ஸ்பார்ம் (Laplace Transform) போன்ற கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவோம்.
இதுபோன்ற கணிதக் கோட்பாடுகளை அறிவியலாளர்கள் அல்லது கணித மேதாவிகளால் மட்டுமே செய்ய முடியும்.
அப்படி இல்லாமல், பொதுவானவர்களும் பயன்படுத்தும் வகையில் நேரடியாக சிக்னல்களில் இருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்... அதற்காகத்தான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள், பேராசிரியர் நந்திகானா மற்றும் அவரது மாணவர்கள்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்து பேராசிரியர் நந்திகானாவிடம் பேசினோம், "இயற்பியல் மற்றும் கணிதத்தில் சிக்னல்களை டிகோடிங் செய்வதற்கு விதிகள் இருக்கும். நேரம் மற்றும் அதிர்வெண்களின் அளவைக்கொண்டு விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலதான் Fourier, Laplace விதிகள் யாவும். ஆனால், இவற்றை எல்லோராலும் பயன்படுத்த முடியாது. எனவேதான், நேரடியாக சிக்னல்களை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கினோம்.
மூளையிலிருந்து உருவாக்கப்படும் சிக்னல்கள் மட்டுமல்ல, அலை வடிவத்தில் இருக்கும் எந்த சிக்னலையும் இதனால் மாற்ற முடியும். அவற்றை நாம் பேசும் மொழியாக இந்தத் தொழில்நுட்பத்தினால் மாற்ற முடியும். ஒரு செடியில் உருவாக்கும் சிக்னலைப் பெறுவதன்மூலம் அது எந்த விதமாக உணர்கிறது என்பதைக்கூட நம்மால் கூற முடியும். இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயற்கையின் அலைவரிசையை கணிப்பதன் மூலம், பருவநிலையை தற்போது கணிப்பதைவிட துல்லியமாகக் கணிக்கலாம். சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் நடப்பதற்கே முன்பே நம்மால் கணிக்க முடியும்.
ஜகோபின் குக்கூ என்று ஒரு வகை பறவையினம் உண்டு. அந்தப் பறவை சத்தம் எழுப்பினால் மழை வரும் என்ற ஒரு நம்பிக்கை இந்தியப் புராணங்களில் உண்டு. அறிவியல்ரீதியாகப் பார்த்தால், மழை வருவதற்கான அறிகுறிகள் அந்தப் பறவைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம். அதனால்தான் மழை வருவதற்கு முன் அது சத்தம் எழுப்புகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எதனால், மழை வருவதற்கு முன் அந்தப் பறவை சத்தம் எழுப்புகிறது என்பதைக்கூட கண்டறியலாம்.
Prof. Nandigana and Team
நாம் பாட்டு கேட்கும்போது, காணொளி இல்லையென்றால் திரையில் அலைபோன்ற ஒரு வடிவம் ஓடிக்கொண்டிருக்கும். அது, அந்தப் பாடலுக்கான அலை வடிவம். அதையே பின்னிருந்து யோசித்துப் பார்த்தால், அந்த அலை வடிவத்தைப் பாடலாக மாற்ற முயன்றால் எப்படி இருக்கும். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். இது தவிர, அறிவியலின் பல கோணங்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்துவருகிறோம். அனைத்திலும் சிறப்பான முடிவுகளே வந்திருக்கின்றன" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment