பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பல லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசு துறைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக நிரப்ப முன் வரவேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஆயிரத்து 330 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சுமார் 2.30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 10 ஆண்டு காலமாக புதிய பணியாளர்கள் நியமனம் இல்லை. மாதம்தோறும் 100க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று வருகின்றனர். பலர் பணி சுமையால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ளனர். இதனால் மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போதுமான போலீசாரின் எண்ணிக்கை இல்லாததால் கொள்ளையர்கள் ஜாலியாக வலம் வந்து நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை நடத்தி விட்டு தப்புகின்றனர். போலீசார் பல முயற்சிகள் எடுத்தும் குற்றங்களை குறைக்க முடியவில்லை. மாநிலத்தில் போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட மத்திய சிறைச் சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகளில் தற்போது குற்றவாளிகள் நிரம்பி வருகின்றனர். ஆனால் போதுமான சிறை காவலர்கள் பணியில் இல்லை. பல மாதமாக காலியாக உள்ளது. மின்வாரியத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட உதவி பொறியாளர் வரை மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மின் வாரியத்தில் தற்போது இருக்கும் பணியாளர்கள் கூடுதல் பணி செய்வதால் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களின் சங்கத்தின் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘தமிழகத்தில் போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, இந்துசமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் கடந்த 10 வருடமாக சுமார் 4 லட்சம் பேர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இருக்கும் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இல்லை. புதிய நபர்கள் நியமனம் இல்லை. இதனால் அரசுத்துறைகள் முற்றிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப மாற்று வழிகளை ஏற்படுத்தி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment