அறம் செய்வதைப் பலபேர் கடமைக்காகவும் கட்டாயத்திற்காகவும் செய்து வரும் சூழலில் முழு விருப்பத்துடனும் மன நிறைவுடனும் விரும்பிச் செய்வோர் மிகச் சிலரேயாவர். அதுபோல், திரைகடலோடித் திரவியங்கள் பலவற்றைத் தம் சொந்த பயன்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வாழும் எண்ணற்ற கூட்டத்தில் தனி ஒருவனாக நின்று வாங்கிக் குவிக்கும் அசையாச் சொத்துக்கள் மீதான மோகத்தைத் துறந்து சக மனிதர்கள் மேல் பெரும் அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்வோர் வணங்கத்தக்க மனிதக் கடவுளாவர்.
அந்த வகையில் 'சமுதாயத்திற்கே சேவையாற்று' என்னும் உயரிய குறிக்கோளுடன் S2S என்ற அமைப்பைத் தோற்றுவித்து, கல்வி சார்ந்த பல்வேறு பணிகளைச் செம்மையாக ஆற்றிவரும் துபாய்வாழ் மனிதநேயப் பொறியாளர், நெல்லைச் சீமையின் மைந்தன் திருமிகு இரவி சொக்கலிங்கம் அவர்கள் என்றும் நினைந்து போற்றத்தக்கவராகக் காணப்படுகிறார். தாம் கடல்கடந்து உழைக்கும் ஊதியத்தின் ஒருபகுதியைத் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆசிரியப் பெருமக்கள் உதவியுடன் எண்ணற்ற சேவைகளை மிகச்சிறப்பான முறையில் செய்து வருவது என்பது வியப்புக்குரியது.
கடந்த 2012 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் இதுவரை 430 க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக் கட்டணம் செலுத்துதல், பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவற்றை 163 மாணவ, மாணவியருக்கும் பெற்றுத் தந்து பள்ளிப் படிப்பைக் கைவிடும் நிலையிலிருந்து மீட்டு கலங்கரை விளக்காக இந்த S2S விளங்கி வருவது எண்ணத்தக்கது.
இதுவரை 64 பள்ளிகளில் காலை இணை உணவுத் திட்டம் என்னும் மகத்தான திட்டத்தைத் தொய்வின்றி நடத்தி நாட்டிற்கே முன்னுதாரணமாக இருந்து வருவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 23 ஆயிரம் பேருக்கு தரமான உணவு அளித்ததும் பெருமைமிகு செயல்களாவன.
மேலும், ஆண்டுதோறும் ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்குவிப்புத்தொகையினை இதுவரை 47 பயனாளிகள் பெற்றுள்ளதும் நம்பிக்கையின்மை மற்றும் நலிவடைந்து வரும் பொறியியல் கல்வி பயிலும் 20 கல்லூரிகளுக்கு மேற்பட்டோருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்கள் நடத்தி வந்துள்ளதும் சிறப்பு வாய்ந்தவை.
அரசுப்பள்ளிகளின் உண்மையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிடும் பொருட்டு, மாணவர்களின் தினசரி வருகையினை மேம்படுத்தும் நோக்கில் 28 பள்ளிகளில் முழுவருகைப் பதிவேட்டுத் திட்டம், 133 பள்ளிகளில் பிறந்தநாள் பரிசுத் திட்டம், 92 பள்ளிகளில் மாணவ வாசகர் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்து வருவது என்பது போற்றத்தக்க சாதனை ஆகும். ஏழை, எளிய மாணவர்களின் புகலிடமாகத் திகழும் அரசுப்பள்ளிகள் மீதான ஏளனப் பார்வைகள் இதுபோன்ற சீர்மிகு திட்டங்களால் செம்மைப்படுவது மறுப்பதற்கில்லை.
மனித மனம் அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் எப்போதும் ஏங்கித் தவிக்கும் இயல்புடையது. இதில் குழந்தைகள் விதிவிலக்குகள் அல்ல. அந்த வகையில், படைப்பூக்கம் நிரம்ப பெற்ற குழந்தைகளின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, பத்து ரூபாய் ஊக்கப்பரிசுத் திட்டத்தின் மூலம் இதுவரை 3600 பள்ளிக்குழந்தைகள் பலனடைந்து வந்துள்ளனர். மேலும், தேசிய திறனாய்வு வழித் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் 262 பேருக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கி ஊக்கப்படுத்தி வருவதென்பது பாராட்டுக்குரியது.
வாழ்த்து அட்டைகள் மூலமாக வாழ்த்துத் தெரிவிக்கும் நடைமுறைகள் ஒழிந்து வரும் இன்றைய சூழலில், 15000 பிள்ளைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வழியாகக் குழந்தைகள் நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தைப் பழக்கப்படுத்துவது என்பது சிறப்புக்குரியது. இதுதவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு 15000 விதை பென்சில்களை இவ்வமைப்பு வழங்கிப் பூமியைக் குளிர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டின் சுகாதார தூதுவர்களாக விளங்கும் பள்ளித் தூய்மைப் பணியாளர்கள் 75 பேரின் சேவையை மெச்சும் விதமாக ஆண்டுதோறும் புத்தாடைகள் வழங்கிச் சிறப்பு செய்தல், 52 ஆதரவற்ற பிள்ளைகளுக்குப் பண்டிகைக் காலங்களில் புத்தாடைகள் பரிசளித்தல் என்பன இவர் மேற்கொண்டு வரும் பிற சேவைகள் ஆகும்.
அதுபோலவே, தன்னலம் கருதாமல் சுய தம்பட்டம் இல்லாமல் மாணவர் பலனைத் தம் ஒப்பற்ற தவறாகக் கருதி உழைத்து வரும் ஆசிரியப் பெருமக்களின் கல்விச்சேவையைப் பாராட்டும் வண்ணம் 15 ஆசிரிய இணையருக்கு சாதனை ஆசிரியத் தம்பதி விருதுகள், பணி நிறைவு பெற்ற 50 பேருக்கு வாழ்நாள் சாதனை ஆசிரியர் விருதுகள், இருபத்தைந்து ஆண்டுகள் பணிநிறைவு செய்த 40 நபர்களுக்கு வெள்ளி விழா விருதுகள் எனக் கேடயமும் சந்தன மாலையும் வழங்கிச் சிறப்பு செய்வதென்பது நல்ல, தரமான அங்கீகாரம் ஆகும்.
கடந்த எட்டு ஆண்டுகளில் இவ்வமைப்பு செய்துள்ள சேவைகள் அளப்பரியவை. தன்னார்வமும் சமுதாயத்தின் மீதான பேரன்பும் பல்வேறு நல்ல பல திட்டங்களைத் திறம்படச் செய்து காட்டியுள்ளதற்குப் பின் மறைந்துள்ள அயராத உழைப்பும் ஊக்கமும் நன்றியுடன் அனைவராலும் நினைவு கூறத்தக்கது. இவ்வமைப்பின் முன்மாதிரியான இச்செயல்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் கிடைத்திட நல்ல மனம் படைத்தோர் பலர் இவரை முன்மாதிரியாகக் கொள்வது நலம் பயக்கும். மேலும், பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் S2S அமைப்பை கல்வி வளர்ச்சி, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் ஆசிரியர்களின் மேம்பாடு ஆகியவற்றின் மைல்கல் எனலாம்
No comments:
Post a Comment