பள்ளி மாணவர்களுக்கு இனி 4 மணிநேர மின்னணு வகுப்புகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ''அன்பு மாணவர்களே, கரோனா அச்சுறுத்தலால் நீங்கள் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் படிப்பில் நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதை உறுதி செய்ய, நாங்கள் மின்னணு வகுப்புகளை அறிமுகப்படுத்த உள்ளோம்.
ஸ்வயம் பிரபா டிடிஎச் சேனல்களில் இவை ஒளிபரப்பாகும். முழுக்க முழுக்க பள்ளிக் கல்விக்கான உள்ளடக்கத்தோடு அவை இருக்கும். உங்களின் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிப்பிட்ட மாநிலங்களில் தினந்தோறும் 4 மணிநேரம் ஒளிபரப்பாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை நீங்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment