திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தண்டியாத்திரை நினைவார்த்த நாணயம் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட்டு பேசுகையில், மகாத்மா காந்திஜி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவில் உப்பு உற்பத்திக்கு வெள்ளையர்கள் 1882 முதல் வரி விதித்து தங்கள் மொத்த வருவாயில் 8.2 விழுக்காடு அளவிற்கு பெறுகிறார்கள் என்பதை காந்திஜி அறிந்து, இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் வெள்ளையருக்கு உப்பு வரி செலுத்த மறுப்பு தெரிவித்தார்.
1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 240 கல் தொலைவில் உள்ள தண்டி என்ற கடற்கரை கிராமத்திற்கு தனது பாதை யாத்திரையைத் துவக்கினார்.24 நாட்கள் நடந்த பாதயாத்திரையின் முடிவில் தண்டியை அடைந்தபின் கடற்கரை ஓரமாக உப்பு தயாரிக்கும் கிராமங்களில் தனது யாத்திரையைத் தொடரவிருந்தார். ஆரம்பத்தில் இப்போராட்டத்தை அலட்சியம் செய்த வெள்ளையர் அரசு இப் போராட்ட செய்திகள் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் உலகெங்கும் பரவி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகுவதைக் கண்ட பின் ஏப்ரல் ஆறாம் நாள் காந்தியை கைது செய்து ஓராண்டு சிறை தண்டனை வழங்கினர். உப்பானது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை என்பதால் இப்போராட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கெடுத்தனர். இது நாடு தழுவிய ஒட்டுமொத்த போராட்டமாக வலுப்பெற்றது. காந்தியடிகளின் தலைமையில் நாடு முழுவதும் ஒன்று திரண்டு போராடியது இதுவே முதல் முறையாகும். அதன் அடிப்படையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகம் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைந்தது. தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து சுமார் 100 பேர் கொண்ட குழு ஒன்று வேதாரண்யம் நோக்கி பாத யாத்திரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.வழிநெடுக மக்களின் பேராதரவைப் பெற்ற இப்பயணத்தால் ஆத்திரமடைந்த வெள்ளையர் அரசு ராஜாஜியும் மற்றவர்களையும் கைது செய்தது. ராஜாஜி ஆறுமாத ஜெயில் தண்டனை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தண்டி யாத்திரை நடைபயணத்தை நினைவு கூறத்தக்க வகையில் 75 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்திய அஞ்சல் துறை நினைவார்த்த அஞ்சல்தலைகளை 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. தண்டி நடைபயணத்தை நினைவு கூறும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 500 ரூபாய் மதிப்புள்ள பணத்தாளில் காந்தியடிகள் தண்டி யாத்திரை மேற்கொண்ட படமும் அச்சிட்டுள்ளது. ஆறு கிராம் எடையுடன் 23 எம்எம் விட்டமுள்ள வட்ட வடிவத்துடன் தண்டி யாத்திரை நினைவார்த்த ஐந்து ரூபாய் மதிப்புள்ள நாணயம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது அதன் விளக்கங்களை நாணயவியல் சேகரிப்பாளர் கணித ஆசிரியர் இளங்கோவன் தொகுத்து வழங்கிய கட்டுரை அடிப்படையில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் இளங்கோவன், நாசர்,முகம்மது சுபேர், மணிகண்டன், தாமோதரன், மன்சூர், சாமிநாதன், ராஜேஷ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் நூல்களை பெற்றுக்கொண்டார்கள்முன்னதாக செயலாளர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment