கரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பை அளித்த 9 வயதுச் சிறுவனுக்கு முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முழு மூச்சுடன் தனது அனைத்துத் துறைகளையும் ஈடுபடுத்தி வருகிறது. நோய்த் தடுப்புப் பணியில் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையில் மத்திய அரசிடம் ரூ.9000 கோடி நிதி கேட்டுள்ளது தமிழக அரசு. ஆனால், ரூ.500 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் நிவாரண நிதியை அரசு பொதுமக்களிடம் கேட்பது வழக்கம். தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு நிவாரண நிதியை தாரளமாக வழங்கும்படி முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு எனத் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, நீங்கள் 100 ரூபாய் நிவாரண உதவி அளித்தாலும் அது பெருந்தொகையே என நேற்று பேட்டி அளித்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்ற திருப்பூரைச் சேர்ந்த 4-ம் வகுப்பு பயிலும் மாணவன் விஷாக், தனது சேமிப்பை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
.மாணவன் விஷாக் எழுதிய கடிதம்:
'தமிழக முதல்வருக்கு வணக்கம். எனது பெயர் விபி விஷாக். திருப்பூர், காந்தி நகர் ஏவிபி பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறேன். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க நான் சேமித்து வைத்திருந்த ரூ.1,150 பணத்தை எனது தந்தை வங்கிக் கணக்கிலிருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன்'.
இவ்வாறு விஷாக் தெரிவித்துள்ளார்.
இதை முதல்வரின் ட்விட்டர் கணக்குடன் டேக் செய்த மாணவரின் தந்தை, 'எனது மகன் தங்களுக்கு கரோனா நிவாரணத் தொகை அனுப்பியுள்ளான்' எனப் பதிவிட்டுக் கடிதத்தையும் பதிவிட்டார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, 'கரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்' எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
விஷாக்-இன் உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும்!!
ReplyDelete