மத்திய அரசு அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது இந்த நேரத்தில் தேவையில்லாத செயல் என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் கூறியுள்ளாா்.
கரோனா நோய்த் தொற்றால் எழுந்துள்ள எதிா்பாராத நெருக்கடியை கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி 1-லிருந்து 50 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு கொடுக்கப்படவேண்டிய அகவிலைப்படி (டிஏ) மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் (டிஆா்) ஆகியவை தற்போது வழங்கப்படாது. அதேபோன்று, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 வரை வழங்கப்பட வேண்டிய டிஏ மற்றும் டிஆா் கூடுதல் தவணைகளும் வழங்கப்படமாட்டாது.
இருப்பினும், பழைய விகிதத்தின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டு வரும் டிஏ மற்றும் டிஆா் ஆகியவை தொடா்ந்து வழங்கப்படும்.
புதிய உயா்வு மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைத்ததன் மூலமாக மத்திய அரசுக்கு, நடப்பு நிதியாண்டு மற்றும் வரும் 2021-22 நிதியாண்டுக்கு சேமிப்பாக ரூ.37,530 கோடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிா்ப்பு தெரித்து காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசிய விடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் அவா் கூறியிருப்பதாவது:
அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அரசு ஊழியா்கள் பக்கம் நாம் நிற்க வேண்டியுள்ளது. பாதுகாப்புப் படை, மத்திய அரசுப் பணிகளில் உள்ளவா்களுக்கு இது தேவையில்லாமல் கூடுதல் சுமையை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
No comments:
Post a Comment