அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது மிகச் சிறந்த யோசனை என்று வாட்ஸப் குழுமம் ஒன்றில் ஒரு நபர் எழுதியிருந்தார். அதற்கு பெரிய ஆதரவில்லை. பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்களின் பணிகளை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஆனால் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. ‘குறைக்கணுமா கூடாதா’ என்று குழம்புகிறார்கள். ‘அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று உருவேற்றி வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படித்தான் குழம்பத் தோன்றும்.
எந்த தனியார் மருத்துவமனையும் செயல்படாத போது அரசு மருத்துவர்கள்தான் தம் குடும்பம், குழந்தகளை எங்கோ விட்டுவிட்டு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்பணியாளர்கள் விடிவதற்கு முன்பாகவே கிருமிநாசினிகளை தூக்கி வந்துவிடுகிறார்கள். இரவு வரைக்கும் தெருக்களிலேயே அலை மோதுகிறார்கள். காவல்துறையினர் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. ‘சார், வொர்க் ப்ரம் ஹோம்..கரண்ட் இல்லை சார்’ என்றால் மின்வாரிய ஊழியர்கள் வந்துவிடுகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்கள் தொடங்கி களத்தில் நிற்கும் ஒவ்வொரு அரசு ஊழியரையும் கையெடுத்துக் கும்பிட வேண்டும்.
இவர்கள் யாராவது முகச்சுளிப்பை காட்டுகிறார்களா? சிலர் திரும்பத் திரும்பச் சொல்வார்களே- அரசு ஊழியர்கள் அசமஞ்சம், காசு கொடுக்காமல் வேலை நடக்காது என்றெல்லாம் அப்படி யாராவது இந்த முப்பத்தைந்து நாட்களில் இருந்தார்களா?
அப்படியென்றால் அரசு ஊழியர்கள் அத்தனை பேரும் யோக்கிய சிகாமணிகளா என்றால் இல்லை. இங்கே எல்லோருக்கும் சுயநலம் இருப்பது போலவே அவர்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் வாய்ப்பு கிடைத்தால் செய்யக் கூடிய பிழைகளை அவர்களிலும் பலரும் செய்வார்கள். எல்லோரும் நினைப்பதைப் போலவே தம் குடும்பத்துக்கும் வருமானம் பார்த்து சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசு ஊழியர்களிலும் உண்டு. ஆனால் இந்தத் தவறுகளையெல்லாம் அரசு ஊழியர்கள் மட்டுமே செய்வதாகவும் பிறர் அத்தனை பேரும் தம்மை உத்தமபுத்திரன்களாகவும் கருதிக் கொள்வதுதான் வேடிக்கை. அந்த உத்தமபுத்திரன்கள்தான் அரசு ஊழியர்கள் என்றாலே மோசம் என்பார்கள். மேற்சொன்ன பிரச்சினைகள் யாவும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொதுவானதில்லை. அது இந்த மனித சமூகத்தில் அத்தனை பேருக்கும் உண்டு. ஆனால் அரசு ஊழியர்கள் மீதுதான் நம் கண் முழுவதும் இருக்கிறது.
சமீபகாலமாக கவனித்துப் பார்த்தால் ஒன்றை உணர முடியும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது விஷத்தையும் வன்மத்தையும் தூவும் மிக மோசமான அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. அந்த வன்மம் குறிப்பிட்ட மதத்தினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட சாதியினர் மீது மட்டுமில்லை; குறிப்பிட்ட பணியினர் மீதும் கூட நிகழ்த்தப்படுகிறது.
ஒரு நிறுவனம் இயங்கும் போது அதனை இயக்க ஊழியர்கள் அவசியம். ‘நீ இவ்வளவு படிச்சிருக்க; உனக்கு இவ்வளவு சம்பளம் தர்றேன்; இவையெல்லாம் உனக்கு அளிக்கப்படும் சலுகைகள்..எனக்காக வந்து வேலை பார்’ என்று பணியில் அமர்த்தும் போது உறுதி வார்த்தைகளை வழங்கி நியமன ஆணை வழங்குவதுதானே உலக நடைமுறை? அப்படி தம்மை நம்பி வந்தவனிடம், தாம் வழங்குவதாக உறுதியளித்த நிதியை வைத்து பல்வேறு வாழ்நாள் திட்டங்களை வகுத்துக் கொண்டவனிடம் ‘உனக்கு நான் நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்று சலித்துப் பேசுவது எவ்வளவு மோசமான முன்னுதாரணம்? ஆனால் அதைச் செய்தார்கள்.
இன்று பேரிடர் வரும் போது யாருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்களோ அவர்கள்தான் முன்கள வீரர்களாக நிற்கிறார்கள். சுகாதாரம், நகராட்சி, உள்ளாட்சி, காவல்துறை என்று பெரும்பாலான பணியாளர்கள் தமக்கு நோய் வந்துவிடும் என்ற பயத்தை மறைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நம் குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமிருந்தாலும் ஒவ்வொரு நாளும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறவர்கள் அவர்கள்தான். அன்று அவதூறு வீசியவர்களில் யாராவது ஒருவர் இன்று இதை மறுத்துப் பேச இயலுமா?
நீங்களும் நானும் வீட்டில் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம்? பால் வாங்கச் சென்றாலும் கூட பதறுகிறோம். ஆனால் அரசு ஊழியர்கள்தான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கும் மேலாக தெருவில் நிற்கிறார்கள். ‘எங்களுக்கு சம்பளம் சேர்த்துக் கொடுங்கள்’ எங்கேயாவது ஒரு முணுமுணுப்பு கேட்கிறதா? ஆனால் இந்தப் புரிதல் இல்லாமல் நம்மில் எத்தனை பேர் அன்றைய தினம் ‘ஆமா...அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது அவசியமில்லை’ என்று முதல்வரின் பேச்சுக்கு ஒத்து ஊதினோம்? எவ்வளவு ஊடகங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து வன்மத்தோடு விவாதித்தார்கள்?
மிகச் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய மருத்துவர்களை பொதுவெளியில் கொச்சைப்படுத்தி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்தது நினைவில் இருக்கிறதா? அப்பொழுதெல்லாம் அரசு மருத்துவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ‘இவர்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம்’ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்கள். இன்றைக்கு நாற்பது நாட்களாக தம் குழந்தைகளை பெற்றோரிடம் விட்டுவிட்டு அவர்களை பார்க்கக் கூடச் செல்லாத அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்றாவது யோசிக்கிறோமா? எத்தனை மருத்துவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது? எத்தனை சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது? சம்பளம் கேட்ட போது பேசிய ஆட்சியாளர்கள் இப்பொழுது மருத்துவர்களின் பாதுகாப்புக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள்? இப்படி எதையாவது நாம் யோசிக்கிறோமா?
யாரோ கிளப்பிவிடும் ஜோதிகா பேசியதுதான் முக்கியம். அதுதான் பேசுபொருள். மற்றபடி, கொரானா தொற்று எண்ணிக்கை நமக்கு தொலைக்காட்சியில் வெறும் எண்ணாக மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையா? அரசு ஊழியர்கள் தமக்கான சலுகைகளையும் ஊதிய உயர்வினையும் பெற காலங்காலமாக நடத்திய போராட்டங்கள் எத்தனை? கைதுகள் எத்தனை? சிறை சென்றவர்கள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், துறை ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள்- இதைப் பற்றியெல்லாம் எதுவுமே யோசிக்காமல் என்னவோ நேற்று ஆட்சிக்கு வந்தவர்கள்தான் பணி நியமன ஆணை வழங்கி மொத்த அரசு எந்திரத்தையும் சுழலச் செய்தார்கள் என நினைப்பது எவ்வளவு அபத்தம்? ஒவ்வொரு ஆரமாகச் சேர்க்கப்பட்டு, மாற்றப்பட்டு அந்தச் சக்கரம் காலங்காலமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று ‘அவர்களுக்கு சம்பளம் அதிகம்’ என்று பேசுவது அற்பமான எண்ணமில்லாமல் வேறு என்ன?
கடவுள், மதம், அரசு ஊழியர்கள், வல்லரசுகள், வளர்ச்சி இன்னபிற இத்யாதிகள் என்று சமீபமாக ஊதிப்பெருக்கப்பட்ட கட்டுக்கதைகள், பிம்பங்கள், அவநம்பிக்கைகளை உடைத்து நொறுக்கவே கொரோனா உருவெடுத்து வந்ததோ எனத் தோன்றுகிறது. ‘யாரோ சொல்வதை, சுயபுத்தி துளியுமில்லாமல் பைத்தியகாரன் மாதிரி உளறிட்டு இருந்தீங்களே...பாருங்கடா’ என்று காட்டிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
அன்றைக்கு அரசு ஊழியர்கள் குறித்தும், அவர்களது ஊதியம் குறித்தும் அவதூறுகளைப் பரப்பியவர்கள்தான் இன்றைக்கு அரசு ஊழியர்களை முழுமையாக நம்பியிருக்கிறார்கள். அவர்கள் இல்லையெனில் மொத்த அரசு இயந்திரமும் முடங்கிப் போய்விடும் என்றுணர்ந்த அவர்களது ஆதரவாளர்களில் சிலரும், இன்னும் வேறு சிலரும் நேர்மையாகப் பேசுவதாக நினைத்து ‘களத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் ஊதியப்பிடித்தம் செய்ய வேண்டாம்; பிற துறை பிடிக்கலாமே’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆசிரியர் உட்பட வேறு சில துறை ஊழியர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒருவேளை நிலைமை கைமீறி போனால், இப்பொழுது இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை போதாமல் போனால் முதலில் யார் களமிறக்கப்படுவார்கள்? அரசு தனது ஊழியர்களுக்குத்தான் முதல் உத்தரவை போடும். நீங்களும் நானும் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். ஆனால் அரசு ஊழியர்கள் எந்த மறுப்பையும் சொல்லாமல் களமிறங்க வேண்டும். ஆசிரியர்கள்தான் நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீதி வீதியாகக் கணக்கெடுக்கச் செல்வார்கள்.
ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துவதன் அடிப்படை தாரக மந்திரமே - ‘உனக்கு நான் ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருகிறேன்; ஒருவேளை நிலைமை மோசமானால் நீ என்னோடு துணை நிற்க வேண்டும்’ என்பதுதான். அரசுக்கு மட்டுமில்லை; தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். நூறு தற்காலிகப் பணியாளர்கள் இருந்தாலும் ஏன் நாற்பது பேர்களாவது நிரந்தரப் பணியாளர்களாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வருடாவருடம் சம்பள உயர்வு அளிக்கிறார்கள்? ஏன் ஊக்கத் தொகை வழங்குகிறார்கள்? ஏன் தம்மைவிட்டுப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொள்கிறார்கள்? மேலே சொன்ன மந்திரம்தான் காரணம்.
நீங்கள் நினைத்தால் வேலைக்கு வைத்துக் கொள்வதும், நினைத்தால் சம்பளத்தை பறிப்பதற்கும் என்ன பெயர் வைப்பது? இவ்வளவு பேரிடரின் போதும், களத்தில் நிற்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கை வைப்பதை வழிப்பறியாகத்தான் கருத வேண்டும். எவ்வளவு பேரிடர் வரினும் பணியாற்ற வேண்டியது எப்படி அவர்களின் கடமையோ அதே போலத்தான் ஊதியம் என்பது அவர்களது உரிமை. இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் ஊதியத்தில் கை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்? அரசு தமக்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பினரயி விஜயன் பிடித்தம் செய்கிறார்; ஜெகன் மோகன் ரெட்டி பிடித்தம் செய்கிறார் என்றால்- ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். பினரயி விஜயனுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம். ஜெகன் மோகனின் மாநிலம் புதியது. வருமான வாய்ப்புகள் இல்லை என்று ஒவ்வொன்றையும் சொல்வார்கள். அப்படியொரு காரணத்தை சொல்ல வேண்டியதில்லையா? மத்திய அரசோடு இணக்கம் காட்டுகிறோம் என்று சாதித்தது என்ன மக்களுக்கு விளக்க வேண்டியதில்லையா?
பேரிடரின் போது அரசு வருமானம் திரட்டும் காரியங்களைப் பார்க்க வேண்டும். என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என ஆலோசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வரி வசூலிக்கிறார்கள்? அதில் நம் பங்கு வந்து சேர்ந்ததா? மத்திய அரசின் நிதி உதவி கிடைத்ததா? திருடிக் கொண்டு ஓடு தொழிலதிபர்களை ஏன் விட்டுவைக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்துவிட்டு எந்த வழியுமே இல்லாத சூழலில், நிலைமையை விளக்கிவிட்டு அரசு ஊழியர்களிடம் கேட்கலாம்- பறிக்கக் கூடாது- கேட்க வேண்டும்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது என்பது தம்மை நம்பியிருப்பவருக்கு அரசு செய்யும் மாபெரும் அநியாயம்- அது நிறுத்தி வைப்பாக இருந்தாலும் சரி; ரத்தாக இருந்தாலும் சரி; பிடித்தமாக இருந்தாலும் சரி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மகனாக, பெற்றோருக்கு அரசு கொடுத்த ஊதியத்தில் உண்டு உடல் வளர்த்து, படித்து அறிவை வளர்த்து மேலே வந்த ஒருவனாக அப்படித்தான் இதைச் சொல்வேன்.
- வா.மணிகண்டன், எழுத்தாளர்.
No comments:
Post a Comment