டாக்டர் கு.கணேசன்
நான் எப்போதும் வலது பக்கமாகத் திரும்பிப் படுப்பேன். இரவில் அடிக்கடி நெஞ்செரிச்சல் வந்து விழித்துக்கொள்கிறேன். இடது பக்கம் திரும்பிப் படுத்தால் இது ஏற்படாது என்கிறார் டாக்டர் இது உண்மையா? எப்படி?
இடது பக்கமாகப் படுத்தால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று சொல்வது உண்மைதான்.
இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் நெஞ்செரிச்சல் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது. உணவுக் குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
நன்மை உண்டாவது எப்படி?
வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும். இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.
மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை.
சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது; குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்ல வேண்டும்; உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக் கூடாது; படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.
கூடுதலாகச் சில நன்மைகள்
# வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர்கள் சரியாகச் சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும்.
# இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.
# வழக்கமான ரத்தச் சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. முக்கியமாகக் கீழ்ப்பெருஞ்சிரை (Inferior vena cava) வலது பக்கத்தில் இருப்பதால், வலது பக்கமாகப் படுக்கும்போது அது அழுத்தப்படும். இடது பக்கமாகப் படுக்கும்போது இந்த அழுத்தம் ஏற்படாது. எனவே, இதில் ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது.
# சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும் தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்தத் தசைகளைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.
கர்ப்பிணிக்கும் நல்லது!
கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கக் கூடாது. அப்படிப் படுக்கும்போது வளர்ந்துவரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துப்போகும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் தாழ்ந்துவிடும். தலை சுற்றி, மயக்கம் வரும். இதைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. இந்த நிலையில் அம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்சினை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும்.
No comments:
Post a Comment