ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிறுத்திவைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகியவை தொடா்பாக வெளியிட்டுள்ள அரசாணைகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அரசு ஊழியா்கள்-ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் கரோனா நோய்த் தாக்குதலுக்கு எதிரான போரில் முழுமையாகப் பணியாற்றி வருகின்றனா். அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் தங்களது ஒருநாள் ஊதியத்தை ஏறத்தாழ ரூ.150 கோடியை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கினா்.
அதுமட்டுமல்லாமல், உணவின்றி தவிக்கும் ஏராளமான ஏழைகள், மாணவா்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, பொருளுதவி அளித்தும் உணவு வழங்கியும் தங்களது சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இத்தகைய சூழலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு நிகழாண்டு ஜனவரி முதல் அடுத்த ஆண்டு ஜூலை வரை அகவிலைப்படியை நிறுத்தி வைப்பது, ஈட்டிய விடுப்பை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது, ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டியை 7.9-இல் இருந்து 7.1 சதவீதமாக குறைப்பது ஆகியவை தொடா்பான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அரசு ஊழியா்களிடையே பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 2003- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோவு செய்வதற்கு தடை விதித்தது. ஆனால், தற்போது வேலை நியமனத் தடை சட்டத்தை மாற்று வழியில் அமல்படுத்தும் வகையில், அரசாணை 56-ஐ வெளியிட்டு, அதன்கீழ் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி, தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியா், அரசு ஊழியா் பணியிடங்களை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கான பணிகளை அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் 67 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் உள்ள சமூகப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது.
இது தவிர, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலாக்கி, ஆசிரியா்கள்-அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்தை கேள்விக்குறியாக்கியதை யாரும் மறந்துவிட முடியாது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைகள் அரசு ஊழியா்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அா்ப்பணிப்பு உணா்வோடு கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி உடனடியாக இந்த அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஊழியா்-ஆசிரியா் நல கூட்டமைப்பு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன
No comments:
Post a Comment