எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கு போன் செய்து வாழ்த்திய அமைச்சர் செங்கோட்டையன் - மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!

Wednesday, April 1, 2020




கரோனா காரணமாக நாடே ஊரடங்கு நிலையில் இருக்கிறது. இதற்கிடையே அன்பாசிரியர் புத்தகத்தைப் படித்த அமைச்சர் செங்கோட்டையன், அதில் எழுதப்பட்டிருந்த ஆசிரியர்களுக்கே நேரடியாக போன் செய்து வாழ்த்தியுள்ளார்.
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்திய தொடர் 'அன்பாசிரியர்'. 'இந்து தமிழ் திசை' இணையத்தில் எழுதப்பட்ட இந்தத் தொடரில் 50 ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைகள், பதிவு செய்யப்பட்டிருந்தன.

அன்பாசிரியர்' தொடர் அண்மையில் நூல் வடிவம் பெற்றது. கடந்த மாதம் அன்பாசிரியர் விருது வழங்கும் விழாவில் 'அன்பாசிரியர்' நூலை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அன்பாசிரியர்  புத்தகத்தைப் படித்துள்ளார். அதில் இடம் பெற்றிருந்த ஆசிரியர்களை நேரடியாக போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக நம்மிடம் பகிர்ந்துகொண்ட அன்பாசிரியர் செங்குட்டுவன், ''காலையில் ஓர் அழைப்பு வந்தது. நான் செங்கோட்டையன்  பேசுகிறேன் ஐயா என்றது ஒரு குரல். நண்பர்கள் யாராவது விளையாடுகிறார்களா என்ற சந்தேகத்துடன் பேசினேன். கருணையும் கனிவுமாகப் பேசினார். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறீர்களா? என்று கேட்டறிந்தார். உங்களின் சேவை என்னை பிரமிக்க வைக்கிறது என்றார். ஏதேனும் உதவி தேவை என்றால் கட்டாயம் கூப்பிடுங்கள் என்றார்.
முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு சமூக ஊடகத்திலும் நான் எதையும் பெரிய அளவில் பகிர்ந்ததில்லை. எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை உலகம் அறியச் செய்த 'இந்து தமிழு'க்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்று உணர்வுப் பெருக்குடன் பகிர்ந்தார் செங்குட்டுவன்.

அன்பாசிரியர் ராஜ ராஜேஸ்வரி  கூறும்போது, ''பீமநகர் பள்ளி சந்தித்த சவால் குறித்து அமைச்சர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்'' என்றார்.
அன்பாசிரியர் ஆரோக்கியராஜ்  கூறுகையில், ''பழங்குடி மாணவர்களுக்காகப் பணியாற்றி வருகிறீர்கள். இதெல்லாம் பெரிய புண்ணியம். தேவைப்பட்டால் ரேஷன் பொருட்களை மாணவர்களின் வீடுகளுக்கு வழங்கச் சொல்கிறேன். உங்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள் என்றார் அமைச்சர். மகிழ்ச்சியாக உணர்கிறேன்'' என்றார்.
''தினந்தோறும் 26 கி.மீ. பயணிக்கிறீர்களே, இட மாறுதல் வேண்டுமா?'' என்று அமைச்சர் கேட்டதாகச் சொல்கிறார் அன்பாசிரியர் லோகநாதன்.
அன்பாசிரியர் செல்வக் கண்ணன் கூறும்போது, ''அமைச்சர்கள் யாரையாவது தொலைபேசியில் அழைக்க வேண்டுமென்றால் உதவியாளர் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர்தானா என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு அமைச்சர் பேசுகிறார், என்பார். ஆனால் நமது கல்வி அமைச்சரோ நேரடியாக எங்களை அழைத்து வாழ்த்தினார்.
எங்கள் பள்ளியின் விரிவாக்கத்துக்குக் கூடுதல் இடம் தேவை என்பதை அறிந்து அருகிலுள்ள தொழில் நிறுவனத்திடம் நான் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஓர் ஆசிரியருக்கு அத்துறையின் தலைவர் எதிர்பாராத நேரத்தில் வாழ்த்துவது என்பது உண்மையிலேயே பெருமிதத் தருணம்'' என்று நெகிழ்கிறார் அன்பாசிரியர் செல்வக் கண்ணன்.
கல்வி அமைச்சரின் இந்த அணுகுமுறை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 comments

  1. Super brothers congrats. You are all lucky guys .proud to be a teacher

    ReplyDelete
  2. I am very proud of our Educational minister and also our teachers.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One