டேய் இன்னைக்கு வீடியோல பாடம் படிப்போம் வாங்க.. எல்லாரும் தொழில்நுட்ப அறையில், அன்றைய பாடத்தின் வீடியோ காட்சியினைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியரின் கண்காணிப்பிலும் அவருடைய சிறிய சிறிய விளக்கத்தினாலும் வகுப்பறை முடிகிறது.. மீண்டும் அடுத்த வகுப்பில் வீடியோவில் பார்த்த அதே பாடத்தை ஆசிரியர் புரிய வைக்கிறார். ஆக தொழில்நுட்ப கருவிகள் அனைத்தும் ஏதோ ஒரு ஆசிரியரின் கட்டுப்பாட்டில் வழிகாட்டலில் பயன்படுததினால் அதற்குரிய பயனை அளிக்கும்.
அதைவிடுத்து மாணவர் எங்கோ, ஆசிரியர் எங்கோ இருவரையும் இணைக்கும் ஜும், ஸ்கைப் போன்ற கருவிகள் இருபக்கத்தையும் இணைக்கும் அவ்வளவே.. ஆனால் ஆசிரியர்களின் உயிரோட்டமுள்ள வகுப்பறையில் தான் மாணவர்கள் பாடக்கருத்துகளோடு ஒன்றிணைவார்கள். ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களின் கற்றலில் ஒரு தொடர்பு விட்டுவிட கூடாது என்பதற்காக பயன்படுத்ாலாமே ஒழிய அதையே மூலக் கற்பித்தல் பணியாக மாற்றினால் ஏமாற்றமே மிஞ்சும்.
ஒரு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வாசகர்களின் கைளுக்குள் தஞசமாகி நூலகத்தை விட்டு வெளியேறி மீண்டும் உள் நுழைந்து மற்றொரு வாசகரின் கைகளுக்குள் தஞசம் அடைந்தால் தான் நூலகம் உயிர்ப்புடன் இருக்கும். அதுபோல தான் பள்ளியும் வகுப்பறையும். அங்கு மாணவர்களின் அரட்டையும் ஆசிரியர்களின் வருகையும் வகுப்பைறையை உயிர்ப்பிக்கும். முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுவதைப்போல“ மாணவர்கள் ஆசிரியர் சொல்வதை மட்டும் கற்றுக்கொள்ளவதில்லை. ஆசிரியர்களைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள்“ கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். கற்றுக் கொண்டே கற்றுக் கொடுப்பவர்தான் ஆசிரியர்கள்..
கற்றல் என்பது ஆசிரியர்களின் வாய்மொழியைக் கேட்டு அதை மனனம் செய்து எழுதி மதிப்பெண் வாங்குவது அல்ல. உதாரணத்திற்கு வகுப்பறையில் நிகழும் கற்றல் சமூகத்திற்குப் பயன்படுவதாக மாற வேண்டும்...
உதாரணத்திற்கு, ஒரு மே மாத கோடை விடுமுறையில் ஊட்டியில் இருந்த அண்ணன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றோம். பத்து நாட்களும் ஊட்டியின் குளிரில் நடுங்கி விளையாண்டு வீட்டிற்கு வநதோம்.. அன்றிலிருந்து அடுத்த இருபதாம் நாள் ஏற்காட்டில் ஒரு பயிற்சி… ஒரு வாரம்… ஆசிரியர்களுக்கு கட்டகம் தயாரிக்கும் பயிற்சி. முதல் முறையாக ஏற்காடு செல்கிறேன். கொண்டு செல்லும் பையில் அனைத்து பொருட்களையும் வைத்து கிளம்ப தளாராகும் முன்.. அம்மா அந்த ஊர் எங்கு இருக்கிறது? என்கிறார்.. அம்மா சேலம் போய் அங்ஙிகருந்து மலையில் ஏறிப் போக வேண்டும்.. ஊட்டிக்கு போனோம்ல அப்படி இருக்கும்.. குளுகுளு என்று குளிர் வாட்டி எடுக்கும்.. உடனே அம்மா “ அப்போ ஸ்வெட்டர் எடுத்துட்டு போ“ என்கிறார்.. ஊட்டியின் குளிர் கற்றுத்தந்த பாடம் அடுத்து அதே போல் ஒரு இடத்திற்கு செல்லும்போது வருகிறதல்லவா? அதான் கற்றல்.
சீக்கிரமே வேலை விட்டு வந்த அப்பாவிடம் மாம்பழம் கேட்கிறது குழந்தை… அம்மா இன்னும் வரவில்லை.. அப்பாவும் மாம்பழம் பிடிக்கும் என்று சேலத்திற்கு போகும்போது வாங்கி வந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தார். இப்போது அப்பழத்தை எடுத்து தோலைச் சீவி துண்டுதுண்டுகளாக்கி கிண்ணத்தில் போட்டு கொடுக்கிறார். குழந்தை அழுகிறது.. எனக்கு மாம்பழம் வேண்டுமென்று. இதுதான் மாம்பழ்தான் சாப்பிடு என்கிறார். குழந்தை மீண்டும் அழுகிறது.. எனக்கு மாம்பழம் வேண்டுமென்று,. அப்பா மறுபடியும் இதுதான் மாம்பழம் சாப்பிடு என்கிறார்.. குழந்தை மீண்டும் அழுகிறது. அம்மா வந்துவிடுகிறார்.. என்னாச்சு ஏன் குழந்தை அழுகிறது.. என்று குழந்தையிடம் விசாரிக்கிறார். உடனே குழந்தை மாம்பழம் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது.. அம்மாவும் அப்பா வெட்டி வைத்த மாம்பழத் துண்டுகளை குழந்தையிடம் தருகிறார். அப்பவும் குழந்தை அழுகிறது. உடனே அம்மா நிலைமையைப் புரிந்து கொண்டு, ஓ.. மாம்பழம் வேண்டுமா? என்று கேட்டுவிட்டு குழந்தையின் முன்னாலே குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து முழு மாம்பழத்தைத் தருகிறார். இப்போது குழந்தை அழுகையை நிறுத்தி பழத்தை வாங்கி கடிக்கிறது. குழந்தையால் மாம்பழத்தைக் கடிக்க முடியவில்லை.. அம்மாவிடம் வெட்டிக் கேட்கிறது. அம்மாவும் கத்தியைக் கொண்டு வந்து குழந்தையின் முன்னால் வைத்து வெட்டி ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுக்கிறார். குழந்தை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் வாங்கிச் சாப்பிடுகிறது.
ஒருமுறை மூன்றாம் வகுப்பில் பிரதாப் என்ற மாணவன் கணக்கு பாடம் படித்துக்கொண்டிருந்தான் .. அவன் கையில் உள்ள அட்டையில் சிறிய கூட்டல் கணக்குகள் இருந்தன. அருகில் அழைத்து எல்லா கணக்கும் தெரியுமா என்று கேட்டபோது. தெரியும் சார் என்றான். சரி 4ம் 4ம் எவ்வளவு. உடனே 8 என்றான். மறுபடியும் 7ம் 7ம் எவ்வளவு என்றேன். உடனே 14 என்றான். 9ம் 9ம் எவ்வளவு என்றேன். உடனே 18 என்றான். நான் இப்போது “ இத எப்படி சொல்வேன்னு பாக்கலாம்னு“ சொல்லிட்டு 18ம் 18ம் எவ்வளவு என்று கேட்ட அடுத்த நொடி 36 என்று சொல்லிவிட்டான். அதோடு விட்டிருந்தால் எனக்கு இன்று அவன் நினைவுக்கு வந்திருக்கமாட்டான். 36 என்று சொல்லிய அடுத்த நொடி வலது கையின் கட்டைவிரலை தம்ஸ்அப் செய்து காட்டி “எப்பூடி?“ என்று சொல்லிக்காட்டினானே பிரதாப் என்ற அந்த பையன். இதுதான் அணுகுமுறை என்பது. ஒரு சின்ன சவால் ஆசிரியர் தருகிறார் அவனின் அறிவுக்கு எட்டியதுதான். அதைச் செய்து முடிக்கும்போது ஆசிரியரைத் தோற்கடித்து விட்டோம் என்ற பெருமித உணர்வு ஒரு வெற்றிக்களிப்பு அவன் முகத்தில் தென்படுமே அதுதான் சரியான அணுகுமுறை.. மாணவனிடம் தோற்றுப்பாருங்கள் தோற்றது நாம் இல்லை.. நம்தோல்வி அந்த மாணவனின் வெற்றிக்கான பாதைகளாக அவனை வழிநடத்திச் செல்லும். ஆனால் நாம் வேண்டுமென்றே அவனிடம் 38ம் 34ம் எவ்வளவு என்று சிக்கலான கணக்கைக் கேட்டு, அவன் திருதிருவென விழித்து போ..போ..போய்ப்படி என்று அவனைத் தோற்கடித்து நாம் வெற்றிபெற்று விடுகிறோம். இது தவறான அணுகுமுறை. என்னால் அப்படி சிக்கலான கணக்குகளைக் கேட்டிருக்க முடியும்.. ஒருவேளை அப்படி கேட்டிருந்தால் அந்த பிரதாப் அன்று கணக்கை வெறுத்திருப்பான்.
இன்னொன்று கூட சொல்லலாம். ஒரு நாய்க்கு உடல்நிலை சரியில்லை. கால்நடை மருத்துவரைப் பார்த்து அதற்கு ஒரு டானிக் வாங்கி வந்தாயிற்று. இப்ப அந்த டானிக்கை அந்த நாய்க்கு கொடுக்க வேண்டும். இரண்டுபேர் நாயின் காலைப் பிடித்துக் கொள்ள அந்த நாயின் வாயில் டானிக்கை ஊற்ற முயன்றபோது நாய் திமிறி குடிக்காமல் வீம்பு பிடித்தது. மீண்டும் நான்கு பேர் ஆளுக்கொரு காலைப்பிடிக்க ஒருவர் வாயைத் திறக்க இன்னொருவர் அதன் வாயில் டானிக்கை ஊற்றப்போக இப்போது நாய் திமிறியதில் டானிக் கொட்டிவிட்டது. வந்தவர்களும்.. “சாவட்டும் நமக்கென்ன“ என்று கூறிக்கொண்டே சென்று விடுகிறார்கள். வாசல் பக்கம் போய் திரும்ப பார்க்கிறார் ஒருவர். இப்போது அந்த நாய் அந்த டானிக்கை நக்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறோம். நாயின் இயல்பு நக்கி குடிப்பதுதானே. அது தெரியாமல் எவ்வளவு கொடுமைப்படுத்திவிட்டோம். “நம் முன்னோர்கள் கூட ஆடுற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்“ என்று ஒரு பழமொழியில் சொல்வார்கள். ஆக குழந்தைகளிடம் இந்த அணுகுமுறையைச் சரியாக கடைபிக்கும் ஆசிரியர் அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பதோடு அவரின் பாடம் அக்குழந்தைகளுக்கு விருப்ப பாடமாகவும் மாறுகிறது. குழந்தைகளின் இயல்பை முதலில் கண்டறிய வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு. அந்தக் குழந்தையின் மனநிலையை உணர்ந்து கற்பித்தால் எப்பேர்பட்ட குழந்தையையும் நாம் நம் குழந்தைக்கு கற்பிப்பதுபோல் கற்பிக்க முடியும்.
இந்த அணுகுமறையெல்லாம் ஆன்லைன் வகுப்புகளில் கண்டிப்பாக கிடைக்காது. இப்படி அணுகுமுறைகள் தான் குழந்தையின் ஆழ்மனதின் அதிசயங்களைத் தோண்டி எடுக்கும். தொழில்நுட்ப கருவிகள் பாடத்தை வலுவூட்டுவதற்கும் காட்சியாக காட்டினால் எளிமையாக மனதில் பதியும் என்பதற்காகவும் பயன்படுத்தலாம். அதை விடுத்து முழுக்க ஆன்லைன் வகுப்புகள் என்பது குழந்தைகளுக்கு பயனைத் தராது.. கிராமத்து குழந்தைகளிடம் அப்படி வசதிகள் இருக்குமா? என்பதும் ஐயம் தான்.
காற்று அனைத்து இடத்திலும் இருந்தாலும் அது வாகனச் சக்கரத்தினுள் இருக்கும் டியூப்பில் இருந்தால் வாகனம் ஓடும். அதேபோல் தான் இறைவன் எங்குமிருந்தாலும் அவனுக்கென்று கோவில்கள் இருக்கிறதல்லவா? அதே போல் கற்பித்தல், கற்றல் என்று வந்துவிட்டால், பள்ளி வகுப்பறை, ஆசிரியர், மாணவர், அரட்டை, கூச்சல். குழப்பம் அனைத்தும் அவசியம்… வெறும் தொழில்நுட்ப கருவிகளால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் அப்போது அந்த நிமிடம் மட் டுமே....பயன் தரும்..
மு.பாலகிருஷ்ணன்
பட்டதாரி ஆசிரியர்
எஸ்.எஸ்.என்.அரசு மேல்நிலைப்பள்ளி,
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம்.
அலைபேசி 8248340305 புலனம் 9698995853
Mail id – muthubala1984@gmail.com
Excellent article Sir...👌👌👌👍👍👍
ReplyDelete