12-ம் வகுப்பு பாட புத்தக்கத்தில் மருத்துவ வைராலஜி என்ற தலைப்பில் இடம் பெற்றது கொரோனா: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3320 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 1886 பேர் உயிரிழந்த நிலையில், 17,847 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 12-ம் வகுப்பு பாட புத்தக்கத்தில் கொரோனா குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நுண் உயிரியல் பாடத்தின் 10-வது அலகில் மருத்துவ வைராலஜி என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. வைரஸ் எப்படி பரவுகிறது? பாதிப்பு சிகிச்சை முறைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 11 வரை உள்ள வகுப்புகளுக்கான பாடங்களிலும் கொரோனா பாடம் சேர்ப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment