விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோ நிவாரண நிதியாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாணவர்களை ஊக்கும்விக்கும் வகையில் தலைமை ஆசிரியர் வெள்ளிக்கிழமை தனது சொந்த செலவில் இந்த மாணவர்களுக்கு உதவிகளைச் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக கோ.ஜெயக்குமார் ஞானராஜ் பணிபுரிந்து வருகிறார்.
இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இப் பகுதியில் உள்ள நூற்பு ஆலைகளில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்தும், அதற்கு உதவிகள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், மாணவர்களிடம் சமூக அக்கறையை வளர்க்கும் வகையில் எடுத்துரைத்தார். இதன் பேரில் மாணவ மாணவியர் தங்கள் கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு ஆடைகள் எடுப்பதற்கு சேமித்து வைத்திருந்த பணம் ரூ.2367 யைஅளித்தனர். இந்தத் தொகையை மார்ச் 31 ம் தேதி தலைமை ஆசிரியர் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
மாணவர்கள் தங்களுக்கு ஆடை வாங்க சேமித்து வைத்திருந்த முழு பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பிவைத்ததை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர் வெள்ளிக்கிழமை புத்தாடைகளை வழங்கினார்.
மேலும் இப்பள்ளியில் படிக்கும் 26 மாணவ மாணவியரின் பெற்றோர் கொரோனா பரவல், பொது முடக்கத்தால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கப்பணத்தையும் வழங்கினாா். சமூக விலகலைக் கடைபிடித்து அனைவரும் நிவாரண உதவியைப் பெற்றுச் சென்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில்; மாணவ மாணவர்கள் தங்களிடம் இருப்பதிலிருந்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு பேரிடர் நேரத்திலும் இதுபோன்ற உதவிகளை செய்ய ஊக்குவித்து வருகிறேன். மாணவர்கள் தாங்கள் பாதிக்கப்படும் அளவிற்கு (தங்களது புத்தாடைகளை தியாகம் செய்து) இந்த உதவியைச் செய்துள்ளார்கள். இவர்கள் பெரியவர்களாக வளர்ந்து வரும்போதும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் தேவையில் உள்ளவர்களுக்கு தாங்களே முன் வந்து உதவி செய்யும் சமூக அக்கறை மனப்பான்மை வளரும் என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி, ஆசிரியை கா.ரோஸ்லினாராஜ், அங்கன்வாடி ஆசிரியை கா.மாரீஸ்வரி மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment