முழு ஊரடங்கில் தாராளம்! தமிழகம் முழுதும் அறிவித்து முதல்வர் உத்தரவு
தமிழகத்தில், இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தாராளமாக தளர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். தொற்று பரவல் அதிகம் உள்ள, சிவப்பு மண்டலமான, கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில், கடைகள், நிறுவனங்கள் செயல்பட, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச ஊழியர்களுடன், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தனிக் கடைகளை திறக்க, பச்சைக்கொடி காட்டியுள்ள அரசு, பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு தலங்களுக்கு தடை தொடரும் என, தெரிவித்துள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று காலை, 11:00 முதல், மதியம், 2:00 மணி வரை நடந்தது.
கூட்டத்தில், ஒருங்கிணைப்பு குழுக்கள் தெரிவித்த கருத்து; கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள்; நிதித் துறை செயலர் தலைமையிலான குழு அளித்த, இடைக்கால அறிக்கை; மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.அதன் அடிப்படையில், நாளை முதல் வரும், 17ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, ஊரடங்கை நீட்டிக்கவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், எந்தவித தளர்வுமின்றி, ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, நாளை முதல், பல பணிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், தாராள தளர்வுகளை, முதல்வர் அறிவித்து உள்ளார்.அதன் விபரம்:சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் அனுமதிக்கப்படும் பணிகள்:* பணி நடக்கும் இடத்திலேயே, தொழிலாளர்கள் இருந்தால், அங்கு கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின், கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் அல்லது மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கு பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவீத பணியாளர்களுடன், குறைந்தது, 20 பேருடன் செயல்பட அனுமதிக்கப்படும்* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 10 சதவீத பணியாளர் அல்லது குறைந்தது, 20 பேருடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே, பணியாளர்கள் வர வேண்டும்* அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை, 6:00 மணியில் இருந்து, மாலை, 5:00 வரை செயல்படலாம்.
உணவகங்களில், காலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, 'பார்சல்' மட்டும் வழங்கலாம். இது, தமிழகம் முழுதும் பொருந்தும்* முடி திருத்தகம், அழகு நிலையம் தவிர, ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக் கடைகள், காலை, 11:00 முதல், மாலை, 5:00 வரை செயல்படலாம்* பிளம்பர், எலக்ட்ரீஷியன், 'ஏசி' மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட பணியாளர்கள், வீட்டு வேலை செய்வோர், சென்னை மாநகராட்சி கமிஷனர் அல்லது கலெக்டரிடம், உரிய அனுமதி பெற வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் அனுமதிக்கப்படும் பணிகள்:* ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில், ஜவுளி உட்பட அனைத்து தொழிற்சாலைகள், குறைந்தபட்சம், 20 பேருடன் செயல்பட அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்பேட்டைகள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
நகர் பகுதி தொழிற்பேட்டைகளில், ஜவுளித் துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை* கிராமப்புறங்களில் உள்ள, ஒருங்கிணைந்த நுாற்பாலைகள், 'ஷிப்ட்' முறையில், தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி, 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம்* நகர்ப்புறங்களில், பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும், கட்டுமான பணி அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின், கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்* பிளம்பர், எலக்ட்ரீஷியன், 'ஏசி' மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட, சுயதிறன் பணியாளர்கள் அனைவரும், கலெக்டரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று அனுமதிக்கப்படுவர்* அச்சகங்கள் செயல்படலாம். ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமானப் பொருட்கள், மின் சாதன விற்பனைக் கடைகள், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டும் செயல்படலாம். கட்டுமானப் பொருட்களை எடுத்து செல்ல, தடை இல்லை* மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட, அனைத்து தனிக் கடைகள், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படலாம்* கிராமங்களில் உள்ள, அனைத்து தனிக் கடைகள், காலை, 9:00 முதல், மாலை, 5:00 வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்* நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக் கடைகள், காலை, 10:00 முதல், மாலை, 5:00 வரை செயல்பட, மாவட்ட கலெக்டர், சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.இவற்றுக்கு தடை தொடரும்!* பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்* வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்* திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்* சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கட்டடங்கள் மற்றும் ஊர்வலங்கள்* விமானம், ரயில், பொது பஸ் போக்குவரத்து, டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா* தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் இறுதி ஊர்வலங்களில், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது* திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்* அனைத்து கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்க வேண்டும்* பொது இடங்களில், ஐந்து நபருக்கு மேல் கூடாமல் தடுக்க வேண்டும்* வேளாண்மை, வேளாண் தொழில்கள், மருத்துவ பணிகள், வங்கிகள், 'அம்மா' உணவகங்கள், ஏ.டி.எம்., மையங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் தடையின்றி முழுமையாக செயல்படலாம்* செங்கல் சூளைகள், கல் குவாரிகள், 'எம்- -சாண்ட்' மற்றும் கல் உடைக்கும் ஆலைகள், அவற்றுக்கான போக்குவரத்து செயல்படலாம்* பெரு தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமான பணிகள் துவங்க, கலெக்டர் அல்லது சென்னை மாநகராட்சி கமிஷனரிடம், இணைய வழியில் விண்ணப்பித்து, அனுமதி சீட்டு பெற வேண்டும்* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக் கடைகள் செயல்பட, தனி அனுமதி தேவையில்லை* கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், தொழிற்சாலைகளுக்கு தகுந்த அனுமதி வழங்கி, வரும், 6ம் தேதி முதல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment