எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுப்பதைப்போல் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த கோரிக்கை

Monday, May 4, 2020




கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. அதிலும் நோய்த் தொற்று அதிகமாக உள்ள தலைநகர் சென்னையில் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஊரடங்கு  நீட்டிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவந்த மாணவர்களின் நிலையைக் குறித்து ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் பகிர்வு இன்றைய சூழ்நிலையிலும் ஒருவேளை உணவுக்காகப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலையை நமக்கு உணர்த்தப் போதுமானது.

சென்னையில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். எங்கள் பள்ளியில் மதிய உணவு வழங்குவதை கண்காணிக்கச் சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்குப் பொறுப்பு போடப்படும். மாணவர்கள் உணவை மீதம் வைக்காமல், வீணாக்காமல் உண்கிறார்களா? தட்டைச் சுத்தப்படுத்தி வைக்கிறார்களா? என்பதை நான் எனது கண்காணிப்பின்போது மேற்கொள்வேன்.
ஒரு நாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி என்னிடம் வந்து "மிஸ், மிஸ் இன்றைக்கு மட்டும் இந்த முட்டையை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா மிஸ்" என்றாள். பொதுவாக தட்டில் எதையும் மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். முட்டையைச் சாப்பிடாமல் இறுதிவரை தட்டில் வைத்திருந்தால் நான் அவளை ஏதேனும் சொல்வேன் என உணவு பரிமாறியவுடனேயே என்னிடம் அவள் இதைக் கேட்டுவிட்டாள். ஏன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும்? என்றேன். மிகுந்த தயக்கத்துடன், "எங்க அம்மாவுக்கு கொடுக்கத்தான் கேட்டேன் மிஸ்" என்றாள். நான் உடைந்தே போய்விட்டேன். எனக்கு அவளின் அம்மாவைத் தெரியும். அவளின் அம்மா கட்டுமானப் பணியில் சித்தாள் வேலை செய்கிறார். கணவன் குடிகாரன். "தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்குறார் மிஸ் வலி தாங்கமுடியல" என பள்ளிக்கு மகளை விட்டுச் செல்லும்போது சொல்வார். ஆனால் அந்த வலியோடுதான் அந்தத் தாய் தினமும் கல்லும் மண்ணும் சுமக்கிறார்.
அந்த மாணவியிடம் இந்த முட்டையை நீ சாப்பிடு, உன் அம்மாவுக்கு நான் வேறு தருகிறேன் என்று கூறி இரண்டு முட்டை கொடுத்துவிட்டேன். இதைச் செய்ய எனக்கு அதிகாரம் கிடையாதுதான். ஆனால் வேறு என்ன செய்வது. மாணவி நன்றாக இருக்கவேண்டும் என்றால் அவளுடைய அம்மாவின் பங்கும் உள்ளதுதானே. மற்றொரு மாணவி மிகவும் மெலிந்து குட்டையாக இருப்பாள். அவள் உருவத்தைப் பார்த்து தட்டில் கொஞ்சம் குறைவாகவே உணவு பரிமாறினேன். அவள் என்னை ஒருமுறை மிக இயல்பாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள் "இன்னும் கொஞ்சம் போடுங்க மிஸ், நான் நல்லா சாப்பிடுவேன்" என்றாள். இவளுக்குப் போதிய உணவு கிடைக்காததால் தான் இவள் இந்த உடல்வாகோடு இருக்கிறாளே தவிர இவளின் உடலைப் பார்த்து உணவிட்டது தவறு என்று புரிந்துகொண்டேன்.
கரோனா பரவலைத் தடுக்கும் முகமாக எங்கள் பள்ளியும் விடுமுறையில் உள்ளது. ஆனால் என் கண்முன்னே இந்த மாணவிகள் போன்று, தங்களது பசியாற வேண்டி பள்ளிக்கு வரும் எங்கள் மாணவ, மாணவிகளின் முகமே உள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் இந்த மாணவர்களுக்காவது மதிய உணவை வழங்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கலாமே என எண்ணுகிறேன். தமிழக அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வீட்டுக்கே எடுத்துச் சென்று கொடுக்க ஆணையிட்டுள்ளது. பெரும்பான்மையான தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையிலேயே வசிக்கின்றனர். அவர்களுக்கும் இதுபோன்று உணவளிக்கும் ஏற்பாட்டைச் செய்தால் எம் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சத்துணவுத் திட்டத்தில் ஏழை குழந்தைகள் பசியாறுவார்களே” என்றார் ஆசிரியர் ஆர். மலர்.
மாணவர்களின் நிலை இவ்வாறாக இருக்க பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் அனுப்பப்பட்ட சத்துணவுப் பொருட்கள் பயன்படுத்தமுடியாமல் தேக்கமடைந்துள்ளன என்கிறார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தராம்பாள்,“ தமிழகத்தில் மொத்தம் ஐம்பத்தி ஐந்து லட்சம் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெற்றுவருகிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, எண்ணெய், பாசிப்பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே பள்ளிகளுக்கு வந்துவிடும்.
முட்டை மட்டும் வாரம் ஒருமுறை அனுப்பப்படும். இதனால் முட்டையைத் தவிர மார்ச் மாதம் சத்துணவுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்தாமல் தேக்கமடைந்துள்ளது. இந்தப் பொருட்களை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் வீடு இல்லாத முதியவர்களுக்கு சத்துணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்துக் கொடுக்கும் ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்யுமாறு சமூக நலத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்கிறார் அவர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One