புதுக்கோட்டையில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பதிவு ஆரம்பம்.
புதுக்கோட்டை,மே.18 : தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் சார்பில் நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பதிவுகள் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
படப்பதிவினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் சார்பில் மாணவர்கள் வீட்டிலிருந்தே நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வினை எதிர் கொள்ளும் வகையில் ஆன்லைனில் இலவச பயிற்சி அளிக்க புதுக்கோட்டையில் படப்பதிவு நடைபெற்று வருகிறது.இப்படப்பதிவில் தாவரவியல்,விலங்கியல்,வேதியியல்,கணிதம்,இயற்பியல் ஆகிய பாடங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான ஆசிரியர்கள் 23 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.படப்பதிவானது காலை 9 மணி முதல் மாலை 5 .45 மணி வரை நடைபெறும்.இங்கு நடைபெறும் படப்பதிவுகள் சென்னையில் எடிட் செய்யப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
எனவே மாணவர்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தே கல்வித் தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படும் நீட் மற்றும் ஜே.இ.இ பயிற்சி பெற்றால் நல்ல மதிப்பெண் பெறலாம் என்றார்.
நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( உயர்நிலை) கபிலன்,பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜ் குமார் ,மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாரதிராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
படப்பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) ஜீவானந்தம்,மணிகண்டன் (உதவியாளர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்) கல்வித்தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
படப்பதிவினை கல்வித்தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஜெபராஜ் மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment