பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என்றும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
No comments:
Post a Comment