எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

5-வது கட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு?....மாவட்ட கலெக்டர்களுடன் இன்று முதல்வர் அவசர ஆலோசனை

Wednesday, June 24, 2020




மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், முழு ஊரடங்கை மாவட்டங்களுக்கும் விரிவு படுத்துவதா?, மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா? என்று முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு 90 நாட்களாக நடைமுறையில் உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக கடந்த மாதம் 4ம் தேதியில் இருந்து படிப்படியாக தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி, கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் திறப்பது, ஆட்டோ, டாக்சி ஓடலாம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி என்பது உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையவில்லை. தினசரி 1000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோன்று சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதை கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த 19ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், சென்னையில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. டந்த சில நாட்களாக சென்னையை போல் திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை தளர்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 90 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், நேற்று ஒரே நாளில் மட்டும் புதிய உச்சமாக 2,710 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 1,487 பேர், மதுரையில் 157 பேர், திருவண்ணாமலையில் 139 பேர், செங்கல்பட்டில் 126 பேர், திருவள்ளூரில் 120 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் இதன் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் எவ்வளவுதான் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழக அரசை மட்டுமல்ல, பொதுமக்களையும் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு கொரோனா வந்தால்கூட, மிகப்பெரிய அளவில் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே போன்று, எந்த மாவட்டத்தில் கொரோனா அதிகரித்தாலும் சென்னையில் இருந்து வந்ததால்தான் கொரோனா எங்கள் மாவட்டத்தில் அதிகரித்து விட்டது என்று பொதுமக்களும் ஏன் அமைச்சர்கள், கலெக்டர்கள் கூட வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படும்போதும், தளர்வுகள் அறிவிக்கப்படும்போதும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தி முடிவு செய்வது வழக்கம். இப்படித்தான் கடந்த 5 முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும் பின்பற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 30ம் தேதியுடன் 5ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதற்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. இந்த நிலையில், கொரோனாவும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஊரடங்கு என்ற பெயரில் மக்களையும் 100 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே முடக்கி வைக்க முடியாது. அவர்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து தவித்து வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் வருகிற ஜூன் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. கலெக்டர்கள் கூறும் பரிந்துரைகள் அடிப்படையிலேயே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது முடித்துக்கொள்ளப்படுமா? என்பது தெரியவரும்.

மேலும் மதுரையைப் போல, மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை வருகிற 30ம் தேதி வரை அமுல்படுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதேபோன்று தங்கள் மாவட்டத்தில் நோயை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்று சில மாவட்ட கலெக்டர்கள் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர். இன்று கலெக்டர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மற்றும் இன்னும் ஓருசில நாளில் மருத்துவ நிபுணர்களுடன் நடத்தப்படும் ஆலோசனைகளை வைத்தே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முடிக்கப்படுகிறதா? என்ற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி வருகிற 29 அல்லது 30ம் தேதி அறிவிக்க திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் என்னதான் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது தமிழக அரசை மட்டுமல்ல பொதுமக்களையும் குழப்பத்திலேயே ஆழ்த்தி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கைவிட சிறப்பான திட்டம் என்ன என்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 comment

  1. வேலையும் இல்லை, வீட்டில் ஒலையும் இல்லை.யாரையும் குறை கூற முடியாது.
    சாவை நோக்கி பயணம். இந்த சாவு யாருக்கும் வரக்கூடாது.சாமியே சரணம் 🙏

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One