தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னையில் நோய்த்தொற்றல் அதிகமாக இருந்த நிலை மாறி, தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொற்று அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கப் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பலருக்கும் நோய் தொற்றவும் செய்கிறது. எனவே, மக்கள் பணியாற்றும் அவர்களைக் காக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் மிக அதிக எண்ணிக்கையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலியாகிக் கொண்டுள்ளனர்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் அலுவலக ஊழியர்களும்,சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் ஏராளமான ஊழியர்களும் இந்த நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலங்களிலும்கூட ஊழியர்களும் அதிகாரிகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்ற செய்தி வருகிறது. இந்நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்தப் பேரிடர் காலத்தில் தமிழக அரசின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு ஊழியர்களின் ஆரோக்கியம் மிக மிக அவசியமானதாகும். எனவே, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமின்றி மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் முதல் கட்டமாக அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
தகவல் தொழில்நுட்பத்துறை அளவுக்குக் கணினி மூலமாக அரசுப் பணிகளை மேற்கொள்ளும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்ற போதிலும் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலான அரசுப்பணிகள் கணினி மூலமாகத்தான் இப்போது செய்யப்படுகின்றன. எனவே, அத்தகைய முகாமையான பணிகளை மட்டும் வீட்டிலிருந்தே கண்ணி மூலம் செய்வதற்கு அலுவலர்களையும் ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும்.
அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆயுள்காப்பீடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் மக்கள் நலப் பணிகள் தொய்வின்றி நடைபெறும். எனவே, இதுகுறித்து விரைந்து ஆலோசித்து நல்லதொரு முடிவைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment