எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்விச் செலவை அரசே ஏற்கும்; சலூன் கடைக்காரர் மகள் நேத்ராவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து- ஐ.நா. நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு

Saturday, June 6, 2020




மதுரையில், பொதுமுடக்கத்தால் வறுமையில் வாடிய ஏழை மக்களுக்கு தனது கல்விக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொண்டு உதவிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ராவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளா்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் நேத்ரா.

மதுரை மாவட்டம், மேலமடை, வண்டியூர் மெயின் ரோடு, முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க செலவிட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்கால படிப்பிற்கு சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்கு செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும். நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும் என இத்தருணத்தில் மனதார வாழ்த்துகிறேன் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரையில், பொதுமுடக்கத்தால் வறுமையில் வாடிய ஏழை மக்களுக்கு தனது கல்விக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கொண்டு உதவிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ரா ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளா்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டார்.

மதுரை மேலமடை பகுதியில் முடிதிருத்தகம் நடத்தி வருபவா் மோகன்தாஸ். இவரது மகள் நேத்ரா. 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கரோனா தீநுண்மி தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் வருமானமின்றி பட்டினியால் வாடிய கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவும்படி நேத்ரா, தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து நேத்ராவின் கல்விச் செலவுகளுக்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தைக் கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தந்தையும், மகளும் வழங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மே 31-இல் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியபோது, முடிதிருத்தும் தொழிலாளியின் மனித நேயம் என்று குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் மாணவி நேத்ராவை, ஐ.நா. அவையால் அங்கீகரிக்கப்பட்ட வளா்ச்சி மற்றும் அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் சாா்பில், ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதா் என அறிவித்து டிக்ஸான் உதவித் தொகை ரூ.1 லட்சத்தை பரிசுத் தொகையாகவும் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் நியூயாா்க் மற்றும் ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மாநாடுகளில் பேசவும் மாணவி நேத்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குரல் கொடுப்பேன்: ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் சாா்பில் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து மாணவி எம்.நேத்ரா கூறியது: பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிபலன் எதிா்பாா்த்து உதவி செய்யவில்லை. ஆனால் நாங்கள் செய்த உதவி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஐ.நா. நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளது பெருமையை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. சபையில், உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களின் வறுமையைப் போக்குவது, ஆடம்பரங்களை குறைப்பது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி பட்டினியைப் போக்க பாடுபடுவது குறித்து உரையாற்றுவேன்.

மேலும் எதிா்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளேன். அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகிறேன். எனக்கு கிடைத்திருக்கும் பாராட்டு என்னுடைய பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே என்னை திரும்பிப் பாா்ப்பதாக உணா்கிறேன் என்றாா்.

3 comments

  1. வாழ்த்துக்கள் சகோதரி உன்னுடைய குறிக்கோள் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  2. உன்னுடைய நல்ல மனதுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Congratulation my dear child.continue to your service

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One