தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியத்தை நிறுத்தப்போவதாக மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின்படி உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யவில்லை என்றால் உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசாணை எண். 525 பள்ளிக்கல்வித்துறை 29.12.1997 ன் படி தமிழ்நாட்டில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:20 லிருந்து 1:40 ஆக உயர்த்தப்பட்டது. அரசாணை எண். 231 பள்ளிக்கல்வித்துறை 11.08.2010ல் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1 முதல் 5 வகுப்புகளுக்கு 1:30 எனவும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு 1:35 எனவும், 9, 10 வகுப்புகளுக்கு 1:40 எனவும் மாற்றியமைக்கப்பட்டது.
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் உயர்வு மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளின் பெருக்கம், ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆகியவை காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக உபரிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றுபவர்கள். 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்கள். தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். உபரியாக உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதியான பணியிடத்தில் பணிமாறுதல் வழங்குவது என்பது அந்தந்தப் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையின் பணியாகும்.
உபரி ஆசிரியர்கள் தங்களுக்குரிய தகுதியான பணியிடத்தைத் தாங்களே தேடிக்கொள்வது என்பது இயலாத ஒன்று. உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. மேலும், தமிழகம் முழுவதும் இப்பிரச்சினை உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டக்கல்வித்துறை மட்டும் கரோனா பேரிடரால் 3 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் ஊதியத்தை நிறுத்தும் செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.
அரசாணை எண்: 525 ல் பள்ளி நிர்வாகமோ அல்லது கல்வித்துறையோ உபரி ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் வழங்க இயலாத நிலையில் ஓய்வு பெறும் வரை பணியாற்றும் பள்ளியிலேயே அவர்கள் தொடர வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உபரி ஆசிரியர்களின் பணி நிரவல் தொடர்பான எந்தவொரு அரசாணையிலோ, சட்ட விதிகளிலோ அல்லது நீதிமன்றத் தீர்ப்பாணைகளிலோ உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி உபரி ஆசிரியர்களாகக் கணக்கிடப்பட்டாலும், அவர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள். சட்டப்படி அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு உள்ளது. நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் எந்தவொரு ஆசிரியருக்கும் பணி வழங்காமல் இருப்பதோ அல்லது ஊதியம் வழங்காமல் இருப்பதோ சட்டப்படி தவறாகும். அவர்களுக்குப் பணி பாதுகாப்பும், ஊதியப் பாதுகாப்பும் அளிக்க வேண்டியது கல்வித்துறையின் கடமையாகும்.
அசாதாரண சூழலில் தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையிலும் மேற்கொண்டுள்ள உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை, பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும், என்றார் அவர்.
Source : "தி இந்து தமிழ்"
No comments:
Post a Comment