எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வியா? மாணவர்களுக்கு பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துமா? இந்து தமிழ் கட்டுரை

Friday, June 5, 2020




தமிழகத்தில் உள்ள 58 ஆயிரத்து 734 பள்ளிகள் மூலம் சுமார் 1 கோடி 31 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் சுமார் 67 லட்சம் மாணவர்களும், 12 ஆயிரத்து 918 தனியார் பள்ளிகள் மூலம் சுமார் 65 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர்.

இதில் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவரும் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை ஆன்லைன் வகுப்பைக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், தமிழகத்தில் 50 சதவிகித மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிராமங்களில் போதுமான இணைய வசதியும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்பு எப்படி சாத்தியம் என்பதோடு, ஸ்மார்ட்போன் அதிகமாகப் பயன்படுத்தும்போது பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான பெற்றோர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் சில பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் செயலுக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இதற்கு பெற்றோரிடம் வரவேற்பு உள்ளது. ஆன்லைன் வகுப்பிற்கு யாரும் கட்டணம் செலுத்த வலியுறுத்தவில்லை. 4 மணி நேரம் வகுப்புகள் நடத்துவது தவறு. அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அரசு என்ன வழிமுறைகளை அறிவித்திருக்கிறதோ அதன்படியே தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும்'' என்றார்.



கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், ''கல்வியைப் பற்றிய புரிதல்தேவை. வகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வி என்பதை ஏற்க இயலாது. சிறுவர்களால் நீண்ட நேரம் இணைய வழியில் பயிற்றுவிக்க முடியாது. அடிப்படையில் இணையவழிக் கல்வி என்பது பாகுபாடு கொண்டது. 58 சதவகித மாணவர்களிடம் இணைய வசதி கொண்ட செல்போன் இல்லாத நிலையில், எப்படி அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எங்கே வேறு பள்ளிக்குச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் காரணமாகவும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்'' என்றார்.

இது தொடர்பாக அரசுப் பள்ளி பாதுகாப்பு மேடை என்ற அமைப்பின் தலைவர் க.திருப்பதி கூறுகையில், ''ஆன்லைன் கல்வி மாணவர் குணங்களை மேலும் திசை திருப்பிவிடப் போகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோதே விழிப்படையாத, விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஆசிரியர் சங்கங்கள் இப்போது மட்டும் என்ன செய்துவிடப்போகின்றன?



மத்திய, மாநில அரசுகள் கரோனா காலத்தை மக்கள் விரோதச் செயல்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளைச் சிதைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது. பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின்போது, மாணவர்களை நீண்ட நேரம் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள், செல்போனை கண்ணில் கூட காட்டாதீர்கள் என்று அறிவுரை கூறினர். போதாக்குறைக்கு பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் கொண்டுவரும் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனவும், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தவர்கள் இன்று ஸ்மார்ட் போனில் வகுப்பு நடத்துவது வேடிக்கையாக உள்ளது. பெரும்பாலான வீடுகளில் தந்தையிடம்தான் ஸ்மார்ட்போன் இருக்கும்பட்சத்தில், அந்த வீட்டில் இருக்கும் மாணவர் எப்படி வகுப்பைக் கவனிப்பார். அரசிடம் தெளிவான பார்வை வேண்டும்'' என்றார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவரும், கண்நோய் சிறப்பு சிகிச்சை நிபணருமான நேருவிடம் கேட்டபோது, ''மாணவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொண்டிருந்தால், கண்ணில் வறட்சி ஏற்படும். தூரப்பார்வை மங்கும். ஸ்மார்ட்போனில் கண் அசைவு இருக்காது, இதனால் மூளை நரம்புகள் பாதிக்கக்கூடும். சராசரியாக ஒருவர் அரைமணி நேரம் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தலாம். அதன் பின் கண்ணை மூடி ஓய்வு அளித்துவிட்டு, அதன்பின் தொடரலாமே தவிர தொடர்ச்சியாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக பார்வைக் குறைபாடு ஏற்படும்'' என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One