பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 16 மற்றும் 17-ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
கரோனா பாதிப்பு இந்தியாவில் 3 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
பிரதமர் மோடி
கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், 5-ம் கட்ட ஊரங்கு ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கியது. ஆனால் இந்த முறை பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வணிக வளாகங்கள், கடைகள் திறக்க நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஜூன் 15-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் ஜூன் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள், பொருளாதார பிரச்னைகள், கரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment