சென்னை:ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், அம்சா கண்ணன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், பணிக்கு செல்லவில்லை. அவர்களுக்கு, முழு சம்பளம் வழங்குவது சரியல்ல. ஒடிசா, தெலுங்கானா, உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில், ஊரடங்கு காலத்துக்காக, அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைக்கும்படி, அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதற்கு பதில், குறிப்பிட்ட சதவீதம் குறைத்து வழங்க கோரி, தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்தை குறைத்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அரசு ஊழியர்களுக்கான சம்பளம் குறித்த கொள்கை முடிவு, அரசை சார்ந்தது. ஊழியர்களுக்கான சம்பளத்தை குறிப்பிட்ட அளவு குறைக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டால் போதுமானது என, வாதிடப்பட்டது.
இந்த விஷயத்தில் முடிவெடுக்கும்படி, தமிழக அரசை நிர்ப்பந்திக்க, மனுதாரருக்கு சட்டப்பூர்வ உரிமை எதுவும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment