பாவைக்கூத்துக்காக தன்னை அர்ப்பணித்து தொடர்ந்து இயங்கும் கலைஞர் மு.கலைவாணன் உடன் ஓர் நேர்காணல்!
இந்த தலைமுறைக்கு ‘பொம்மலாட்டம்’எனப்படும் பாவைக்கூத்து தொலைவில் இருக்கும் அரிய கலை. சில தலைமுறையின் நினைவுகளில் பாவைக்கூத்து மாறாமல் இடம் பெற்றிருக்கலாம். இந்த தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் விரிசலை பாவைக்கூத்தை வைத்தே நிறைக்க முடியும் என நிரூபிக்கிறார் பாவைக்கூத்து கலைஞர் மு.கலைவாணன்.
அவரோடு கல்விசிறகுகள் நடத்திய உரையாடலின் தொகுப்பு இதோ...!
நீங்க பாவைக்கூத்து யார் கிட்டயிருந்து கத்துக்கிட்டீங்க ?
நான் பிறந்தது சென்னையில. எஸ்.எஸ்.எல்.சி வரை படிச்சிருக்கேன். நான் யார் கிட்ட இருந்தும் பாவைக்கூத்து கத்துக்கல. பள்ளிக்கூடத்துலயே டீச்சர் அசஞ்சு அசஞ்சு பாடம் நடத்துவாங்க இல்ல? அவங்கள மாதிரியே பேப்பர்ல வரைஞ்சு பசங்க கிட்ட அத ஆட்டி காட்டுவேன். அவங்க அதைப் பார்த்து ரசிச்சவுடனேயே, அதே மாதிரி கத்திரிக்காய் உருளைக்கிழங்குல எல்லாம் பொம்ம செஞ்சு சும்மா விளையாட்டா பொம்மலாட்டம் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்.
என்னோட அப்பா, கவிஞர் முத்துக்கூத்தன்னு பேரு, அவர் நாடக நடிகராகவும் சினிமாவுல அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் இருந்தாரு. அவரும் நானும் சேர்ந்து பொதுவெளில நிகழ்ச்சி நடத்தலாம்னு ஐடியா பண்ணி எழுபத்தி ஆறுல பண்ணத்தொடங்குனோம். கடந்த 42 வருஷமா இதைப் பண்ணிட்டு இருக்கேன்.
தமிழ்நாட்டுல நாலு வகையான பாவைக்கூத்து இருக்கு. ஒண்ணு, கயிறு கட்டி ஆட்டுற மரப்பாவைக்கூத்து. ‘இந்தியன்’ படத்துல வர்றது இது தான். தமிழ்நாட்டுல நிறைய காலமா இருக்குற பொம்மலாட்ட வடிவம் அது தான். ‘தசாவதாரம்’ படத்துல வர்றது தோல்பாவைக்கூத்து. நிழல்பாவைக் கூத்துனு ஒண்ணு இருக்கு. அது இல்லாம ராட் பப்பெட்னு (rod puppet) சொல்லுவாங்க - ஆந்திராவுல உத்திர பிரதேசத்துல இது இருக்கும். பொம்மையோட கைக்கு ஒரு கம்பி இருக்கும் உடம்புக்கு ஒரு கம்பி இருக்கும். தோள்கள்ல மூங்கில் குச்சி இருக்கும் - அத வெச்சு ஆட்டுவாங்க. நான் செய்யறது ‘க்ளவ் பப்பெட்’. அதாவது பொம்மைக்குள்ள கைய விட்டு ஆட்காட்டி விரலை தலைக்கும், கட்டைவிரலையும் நடுவிரலையும் உடம்புக்குமா வெச்சு செய்யறது.
நீங்க எதைப் பத்தியெல்லாம் கதை சொல்லுவீங்க?
பாவைக்கூத்து நடத்துற மற்ற எல்லோருமே இராமாயணம், மகாபாரதம், நல்ல தங்காள் கதை மாதிரியான கதைகளை தான் சொல்லுவாங்க. காரணம், புதுசா கதையோ உரையாடலோ எழுத வேண்டியது இல்ல. ஏற்கனவே நாடகமா இருக்கும்.
“ஆனா நான் செய்யுற பாவைக்கூத்து எல்லாமே சமூக கருத்துக்கள் சார்ந்தவையாகத் தான் இருக்கும். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களின் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு, பூமி வெப்பமயமாதல், மனித உரிமை, நீர் மேலாண்மை, மாசுக்கட்டுப்பாடு - இந்த மாதிரியான விஷயங்கள்.”
ஆறாயிரத்து எழுநூறு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன் ; தூர்தர்ஷன் வசந்த டிவில எல்லாம் முந்நூறு நிகழ்ச்சிக்கு மேல பண்ணிருக்கேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு தயாராவதற்கு உங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு?
முதல்ல நீங்க சொல்ற கான்செப்ட நான் புரிஞ்சிக்கணும். அது தொடர்பா நிறைய தகவல்களை தெரிஞ்சுட்டு ஸ்க்ரிப்ட் தயார் பண்ணனும். ஸ்க்ரிப்ட் தயார் பண்ணிட்டு அதுக்கு பொம்மை செய்யணும். என்கிட்ட இருக்க முந்நூறு பொம்மையுமே நான் செஞ்சது தான். காகிதக்கூழ், சுக்கா மாவெல்லாம் பயன்படுத்தி முன்னாடி செஞ்சிட்டு இருந்தோம். இப்போ ஃபைபர்ல மோல்ட் போட்டு பொம்ம செய்றோம். புதுசா ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி தொடங்குனோம்னா எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் ரூபா செலவு ஆகும்.
எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துவீங்க?
நீங்க என்னை கூப்பிட்டீங்கனா, நான் வந்து நிகழ்ச்சி நடத்தி தருவேன். நானா போய் டிக்கெட் போட்டு புரோக்ராம் நடத்துனது இல்ல. சமூக விழிப்புணர்வுக்காக வேல செய்றவங்க, என்.ஜி.ஓக்கள் எல்லாம் என்னை புரோக்ராம் நடத்த கூப்பிடுவாங்க. தமிழ்நாட்டுல ஒரு இரண்டாயிரம் என்.ஜி.ஓக்கள் இயங்குதுன்னா, அத்தனை பேருக்குமே என்னை நல்லா தெரியும். முழு நேர வேலையா செய்றதால, இதுல வர்ற வருமானம் போதுமானதா இருக்கு. போதுமானதுன்னு சொல்றதவிட மனநிறைவா இருக்கு.
எந்த மாதிரியான பார்வையாளர்கள் பாவைக்கூத்தை ரசித்து பார்க்குறாங்க?
நிறைய படித்த மக்கள்ல இருந்து ஒண்ணுமே தெரியாத கிராமத்து மக்கள் வரை எல்லார் முன்னாடியும் நான் நிகழ்ச்சி நடத்திருக்கேன். ஹாஸ்பிட்டல்ல பேஷண்டுகளுக்கு மத்தியில் நடத்திருக்கேன், பெரிய ஆடிடோரியத்துல நடத்திருக்கேன், கரண்டு இல்லாத கிராமத்துலயும் போய் நிகழ்ச்சி நடத்திருக்கேன். எல்லாருக்குமே பொம்மைகள் பிடிக்கும். குழந்தைகளுக்கு பொம்மைகள் பிடிக்கும். பெரியவங்களுக்கு பொம்மை பிடிக்குமான்னா? பிடிக்கும். அவங்களுக்கு சிலையாகவோ, கடவுள் உருவமாகவோ எப்படியோ பிடிக்கும். பொம்மைய வச்சு கதை சொல்றதை கொஞ்ச நேரமாவது நின்னு பார்க்கணும்னு தோணும்.
சொல்லப்படுற கருத்து அவங்களை ஈர்க்கும் போது நிறைய நேரம் இருந்து பார்ப்பாங்க. பெரிய பெரிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் பார்த்து வியந்து பாராட்டுனது தான் பாவைக்கூத்து.
நீங்க வாங்குன விருதுகள் பற்றி ?
எண்பத்து ஆறுல சென்னையில் இருக்க இலக்கிய வீதின்னு ஒரு அமைப்பு பொற்கிழி கொடுத்து பாராட்டுனாங்க. 2014 ல BAPASI (Book Sellers and Publishers Association of South India) - புத்தக கண்காட்சிகள் எல்லாம் நடத்துற அமைப்பு - அவங்க கலைஞர் பொற்கிழி விருது கொடுத்தாங்க. ஆழ்வார் ஆய்வு மையம் சான்றோர் விருது கொடுத்தாங்க, முத்தமிழ் மன்றம் பெரியார் விருது கொடுத்தாங்க. இப்போ சமீபத்துல லயோலா வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருக்காங்க.
பாவைக்கூத்தை கத்துக் கொடுக்கற முயற்சி எதாவது செய்றீங்களா?
ஆமா. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஆசிரியர்களுக்கு பாவைக்கூத்து வகுப்பு நடத்துறோம். ஆரம்பப்பள்ளில பாடம் நடத்துறாங்க இல்லையா, அதை பாவைக்கூத்து வழியா செஞ்சா ரொம்ப ஈஸியா மாணவர்கள் பாடத்தை புரிஞ்சுப்பாங்க. கேட்குற விஷயங்களை விட பார்க்குற விஷயங்கள் தான் நம்ம மனசுல நல்லா நிக்கும். ஐந்தில் இருந்து பத்து வயசு வரைக்கும் இருக்குற குழந்தைகளுக்கு டீச்சர் கையில பொம்மை வச்சு பாடம் சொல்லிக் கொடுத்தா நல்ல ரீச் இருக்கும். மனசுல ஆழமா பதியும்.
கூடவே, ஊடகத்தோட தாக்கத்தால அழிஞ்சுட்டு இருக்க பொம்மலாட்ட கலையை காப்பாத்த இது ஒரு நல்ல யுக்தி. டி.வி வந்ததுல இருந்தே எல்லாரும் வெளிய வர்றது ரொம்ப கொறஞ்சிடுச்சு. இன்னைக்கு நான் பாவைக்கூத்து நடத்துறேன். ஆனா, நாளைக்கு என் பசங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா?
இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள்ல மாரல் (moral science) பீரியட் கிடையாது, டிராயிங் பீரியட் கிடையாது, கிராஃப்ட் பீரியட் கிடையாது, பாட்டு கிளால் எல்லாம் கூட இல்லை. எல்லாரும் மதிப்பெண் நோக்கி ஓடுற இடமா பள்ளிக்கூடங்கள் இருக்கு. அது கல்வியே கிடையாது.
நூறு வார்த்தையை மனப்பாடம் செய்றவன் திறமையான மாணவன் கிடையாது; நூறு வார்த்தைகளை புதிதாக க்ரியேட் செய்பவன் தான் புத்திசாலி. இதற்கு கலை வழியா கற்பிக்கப்படுற கல்வி உதவும். இப்போ அரசாங்கம் பள்ளிக்கூடத்துல எல்லாம் செயல்வழி கற்றல் மாதிரி நிறைய நுட்பங்கள யூஸ் பண்ணுறாங்க. அந்த மாதிரி பாவைக்கூத்தை பாடத்திட்டத்தில் ஒரு வடிவம் ஆக்கணும்.
No comments:
Post a Comment