திருவள்ளூர் மாவட்டத்தில் தத்தெடுத்த கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார். பள்ளிக்கூடத்தில் 3 அறைகள், 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது அதிகத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியை சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தத்தெடுப்பதாக அறிவித்தார். மே தினத்தையொட்டி நேற்று அதிகத்தூர் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சிதம்பரநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு சாலை, குடிநீர் வசதி வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், தடுப்பணைகள், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிராமசபை கூட்டத்தில் பிரதிநிதிகள் அழைப்பின் பேரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர் தனியாக வேறு ஒரு இடத்தில் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். கிராம மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
இங்கே நான் உங்களில் ஒருவனாகத்தான் வந்துள்ளேன், ஒருவனாக ஆவதற்காக வந்திருக்கிறேன். நான் இந்த கிராமத்தை எனது கிராமமாக மாற்றிக்கொள்வதற்காக தான் வந்துள்ளேன். இந்த கணம் முதல் நான் பேசுவது எனது குடும்பத்தினரான உங்களுடன். இந்த கிராமத்தில் வாழும் அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது எனது கடமை.
ஒரு அரசு செய்ய முடிந்ததை ஒரு தனி கூட்டம் செய்யமுடியாது என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முடியும் என நாங்கள் காட்டப்போகிறோம். அதனால் தான் நாங்கள் 12,500 கிராமத்தை தத்தெடுக்கவில்லை. அது முடியாது, அது அரசாங்கப்பணி. நாங்கள் எங்களால் இயன்றது என்னவென்று யோசித்து அதில் வெற்றிபெற முடியும் என்ற பாதையில் தைரியமாக நடந்திருக்கின்றோம்.
தற்போது நாங்கள் 8 கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம். தற்போது எங்களால் அவ்வளவு தான் முடியும். உங்களின் ஆசியும், உதவியும் இருந்தால் 12,500 கிராமத்தையும் பொறுப்பேற்கும் நாள் வரும். இந்த கிராமத்திற்கு நிறைய செய்ய வேண்டியதுள்ளது. தற்போது நாங்கள் உடனடியாக செய்யப்போவது, இங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3 அறைகள், கிராமம் முழுவதும் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும். விரைவில் அவைகள் கட்டி முடிக்கப்படும்.
கிராமத்தை இன்னும் பசுமை ஆக்குவதற்கு மரங்கள் நடப்படும், திறமைகளை வளர்த்துக்கொள்ள கருத்துப்பட்டறைகள் தொடங்கப்படும், தடுப்பணை கட்டப்படும், தற்போதுள்ள குளத்தை சீரமைத்து அதனை சுற்றி கல் பதித்து சுற்றுச்சுவர் அமைக்கப்படும், ஏரிகளை மீண்டும் புனரமைத்து நீரை சேமித்து அது பறவைகள் தங்கும் இடமாக மாற்றப்படும். இவ்வாறு நாங்கள் செய்வது ஓட்டுக்காக அல்ல. அனைத்து மக்களின் வாழ்வாதாரம் உயர தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் கமல்ஹாசனுக்கு பாசி மாலை அணிவித்தார்கள். அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தாமரைக்குளம், நரிக்குறவர் காலனி ஆகியவற்றை கமல்ஹாசன் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment