எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

7 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி

Wednesday, May 2, 2018

தமிழகத்தில் முதல்கட்டமாக 7 புதிய தனியார் கலை -அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக் கோரி 65 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைகள், ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்பிகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது.

இது இப்போதும் தொடர்கிறது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 13 முதல் 20 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன. 200 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்க விண்ணப்பிக்கின்றன. அதுபோன்று, இந்த ஆண்டு விண்ணப்பித்த கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 19 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையை முழுமையாக நிறுத்த உள்ளதாக ஆன்-லைன் பொறியியல் சேர்க்கை அறிமுக நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைந்து வரும் நிலையில், கலை அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.

இதனால் புதிய கலை-அறிவியல் கல்லூரி தொடங்க விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

இதற்காக கடந்த ஆண்டு 67 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 2018-19 ஆண்டுக்கு 65 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் அதிகரிக்கும்: இதில் முதல்கட்டமாக 7 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறினார்.

இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மட்டும் 3 கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One