தருமபுரி ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன் கீர்த்திவாசனுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள்
ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இவரை காண அரசியல் கட்சியினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் தருமபுரியைச் சேர்ந்த வெ.கீர்த்திவாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29-வது இடத்திலும், தமிழகத்தில் முதலாவது இடத்திலும் முதல் முயற்சிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், சொந்த ஊரான தருமபுரி வந்த வெ.கீர்த்திவாசனுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு, ஓய்வு பெற்ற ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முனியப்பன் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வெ.கீர்த்திவாசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், "தருமபுரி மாவட்டம் கல்வியில் பின்தங்கி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு அதிக அளவில் படித்து தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
தருமபுரியில் பள்ளி படிப்பை முடித்து தொடர்ந்து திருச்சி ஐ.ஐ.டி. கல்லூரியில் கட்டிட பொறியாளர் படிப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரிக்கு வருகை தந்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பார்த்து நாமும் இது போன்று உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்து முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன்.
என்னை போன்று இளைஞர்கள் தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக்கி கொள்ள வேண்டுமானால் கடுமையாக படித்து போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.
நான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகி ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிவதுடன், அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவேன். எனது இந்த முயற்சிக்கு தந்தை வெங்கடேஷ்பாபு, தாயார் தீபா மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment