செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, அரசு அமல்படுத்தி வருகிறது. இலவச நோட்டு, புத்தகம், காலணி, புத்தக பை, சீருடை, சைக்கிள், 'லேப்டாப்' என, 14 வகையான இலவசங்கள் வழங்கப்படுகின்றன.ஆனாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது, பெரும் சவாலாக உள்ளது.
அரசு உதவி பள்ளிகளை பொறுத்தவரை, தங்கள் பள்ளிக்கான ஆசிரியர் பணியிடங்களை தக்கவைக்க, தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை சேர்க்கின்றனர்.அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாத சூழல் உள்ளது. 2017 ஆக., 1 நிலவரப்படி, 890 தொடக்க பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் இருப்பது, ஆய்வில் தெரிய வந்தது. அதிலும், 33 பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை.இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்தால் மட்டுமே, அந்த பள்ளிகள் இயங்க முடியும். இல்லாவிட்டால், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு, அவற்றில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள, அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்னும் ஒரு மாதத்தில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள், செப்டம்பருக்கு பின், அருகில் உள்ள இன்னொரு பள்ளியுடன் இணைக்கப்படும் என, தெரிகிறது.அதனால், 890 தலைமை ஆசிரியர்கள் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, கட்டாய பணியிட மாற்றம் ஏற்படும்.அதனால், அதிலிருந்து தப்ப, போதிய மாணவர்களை சேர்க்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment