விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கிடையை நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு கொடுத்து அவர்களை ஊக்குவித்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா.
சோட்டோகான் கராத்தே அசோஸியேசன் சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் சனிக்கிழமை ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 32 மெட்ரிக்குலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 370 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மாவட்டதிலிருந்து ஒரே ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவ மாணவியர் கலந்து கொண்டார்கள்.
இப் போட்டியில் கலந்து கொண்ட படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் வெற்றி பெற்றனர்.
8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் குமித்தே என்னும் தாக்குதல் போட்டியில் ஜி.காளி வைஷ்ணவி, வி.பவித்ரா ஆகியோர் முதலிடம் பெற்றனர். கே.கௌசல்யா, வி.யோகமுனீஸ்வரன் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.
மேலும் 10 வயதிற்குட்பட்டோர் போட்டியில் அ.கனிதா, எம்.வேல்மயில், அனிதா, எஸ்.லிஸாந்தி, ஜி.காளி தீபிகாவும் 8 வயதிற்குட்பட்டோர் போட்டியில் எஸ்.ஜெயபாரத், சுரேஷ் குமார் ஆகியோரும் 6 வயதிற்குட்பட்டோர் போட்டியில் பி.பொன்சக்தியும் மூன்றாம் இடம் பெற்றனர்.
தனது தொகுதியிலிருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு அரசுப் பள்ளி குழந்தைகளையும், இதனை ஊக்குவித்து தனது சொந்த செலவில் அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து, போட்டியில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து மாணவர்களை ஊக்குவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜையும் சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பாராட்டினார். குழந்தைகளுக்கு தலா ரூ.500 ஊக்க பரிசுத் தொகை வழங்கினார்.
No comments:
Post a Comment