எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

எங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசுப் பள்ளி- எங்கள் முகவரி' என்ற அமைப்புக்கு ஒதுக்குவோம்!’ - 4 ஆசிரியைகளின் பலே முயற்சி

Friday, September 28, 2018





அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. அதை உரிய வகையில் ஊக்கப்படுத்தினாலே அவர்களை உலகத்துக்கு அடையாளம் காட்ட முடியும்.



இதை, ஏழைக் குழந்தைகளின் பெற்றோரால் செய்ய இயலாது. எனவே, நாங்கள் செய்கிறோம் எனக் கரம்கோத்திருக்கிறார்கள், அரசுப் பள்ளியைச் சேர்ந்த நான்கு ஆசிரியைகள். மாற்றமும் ஏற்றமும் தன்னால் உருவாகாது. நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீதா, பத்மஶ்ரீ, சசிகலா மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனா பூபதி ஆகிய நான்கு ஆசிரியைகள் இணைந்து, 'அரசுப் பள்ளி; எங்கள் முகவரி' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.








அமைப்பின் நோக்கம்குறித்து ஆசிரியை கீதா கூறுகையில், "அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் பல திறமைகள் இருந்தாலும், அவற்றை அவர்களால் முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த நிலை மாறினால், மாணவர்களின் திறனும் அரசுப் பள்ளிகளின் தரமும் நம்பகத்தன்மையும் உயரும். எனவேதான், நான்கு ஆசிரியைத் தோழிகள் ஒன்றிணைந்து 'அரசுப் பள்ளி; எங்கள் முகவரி' என்ற அமைப்பைக் கடந்த மாதம் தொடங்கினோம்.



கட்டுரை, கவிதை, கையெழுத்து, பேச்சுத் திறமை, விளையாட்டு என அரசுப் பள்ளி மாணவர்களின் திறமை எதுவாக இருப்பினும் அவற்றை போட்டோ எடுத்துப் பல ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அப்படி எங்கள் கவனத்துக்கு வரும் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொருவருக்கும் ரூ.500 முதல் ரூ.1000 வரை அனுப்பிவைப்போம்.

உடை, கல்விக்கான உபகரணங்கள், காலணிகள், பயணம் என அந்த மாணவர்கள் தம் விருப்பமான தேவைக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் கவனித்துக்கொள்வார்கள். இப்படி அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதால், வானத்தில் வட்டமிட்டுப் பறப்பதுபோல அவர்களுக்குள் உற்சாகம் பிறக்கும். இன்னும் திறமையுடன் செயல்படுவார்கள். இதற்காக, எங்களுடைய மாத ஊதியத்தில் ஒரு பகுதியை எங்கள் அமைப்புக்கு ஒதுக்குவோம்.

இதுவரை 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்திருக்கிறோம். தவிர, சிறப்பாகப் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் விருது வழங்க நினைத்தோம். அதன்படி பல்வேறு அரசுப் பள்ளிகளிலிருந்து 12 ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு சிறந்த நல்லாசிரியர் விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கினோம். தற்போது, எங்கள் அமைப்பில் பல ஆசிரியைகளும் இணைவதற்கு முன்வந்துள்ளனர். எங்கள் முயற்சியால், அரசுப் பள்ளிகளில் மாற்றமும் வளர்ச்சியும் உயரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கீதா. உங்கள் எண்ண விதைகள் விருட்சமாகட்டும்!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One