எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

Saturday, September 1, 2018


தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ஆர்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட இரு வகுப்பறைகளைத் திறந்து வைத்தனர்.
அதன் பின்னர், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் 2 வகையிலான புதிய வண்ண பள்ளிச் சீருடைகள் இந்த ஆண்டுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுக்குப் பின்னர், கலந்தாய்வு முறையில் அவை நிரப்பப்படும். அதுவரை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்தப் பகுதிகளில் ரூ.7,500 சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் யோகா கற்றுத் தரும் பணிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆழியாறு வாழ்க-வளமுடன் அமைப்பு, சேவை அடிப்படையில் யோகா கற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி முழுமையாகக் கிடைக்கும் வகையில், அந்த பயிற்றுநர்களுக்கு போக்குவரத்துச் செலவு போன்ற இதர படிகள் பெற்றுத் தருவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1.3 லட்சம் அளவுக்கு கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 1, 250 பள்ளிகளில் 10 -க்கும் கீழ் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலை மாறி, 285 பள்ளிகளில் சேர்க்கை மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகள் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்க முன்வந்தால், அதற்கான இடங்களை அரசு அளிக்க ஆவன செய்யும். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில், 192 பேரின் மதிப்பெண்களில் தவறு கண்டறியப்பட்டுள்ளது. அதில் எட்டு பேர் மீது கடுமையான நடவடிக்கை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One