கடந்த 5 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகளை பெற தகுதியான வீரர்கள், பயிற்சியாளர்கள் வரும் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் தலா 2 ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சிறந்த 2 பயிற்றுநர்கள், சிறந்த 2 உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. அதேபோல், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் அல்லது ஒரு நிர்வாகி அல்லது ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் அல்லது ஒரு ஆட்ட நடுவர் அல்லது நீதிபதி ஆகியோர்களுக்கும் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
2 ஆண்டுகளின் செயல்பாடுகள் விருதுக்கான தகுதியாக கருதப்படும். பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின்படி 2013-14, 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதியாண்டுக்கான (ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கணக்கில் கொள்ளப்படும்) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்துக்கு வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0451- 2461162 என்ற எண்ணில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment