தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு படிக்கும், ஒரு லட்சம் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஆறு மாதம் முதல், 5 வயது வரையுள்ள குழந்தைகள் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.இந்த அங்கன்வாடிகளுக்கு, மத்திய அரசில் இருந்து நிதியுதவி கிடைக்கிறது. ஆனாலும், தமிழக அரசின் சார்பிலும், நிதி பங்களிப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 43 ஆயிரம் அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. தற்போது, தமிழக அரசுக்கு, நிதி நெருக்கடி உள்ள நிலையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்படி, தமிழக அங்கன்வாடிகளில் உள்ள, இரண்டரை வயதுக்கு அதிகமான குழந்தைகளை, அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., ஆகிய வகுப்புகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக நலத்துறை மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள், இந்த வாரம் பேச்சு நடத்த உள்ளனர். இரண்டு துறை அமைச்சர்களும் பேச்சு நடத்தி, ஒரு லட்சம் குழந்தைகளை அங்கன்வாடிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாற்ற உள்ளனர்.இந்த மாற்றத்தை தொடர்ந்து, இரண்டரை வயதுக்கு அதிகமான குழந்தைகளை மட்டும் பராமரிக்கப்படும், அங்கன்வாடிகளை மூடுவது குறித்து, பரிசீலிக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment