பள்ளியில் நடக்கும் விழாவில் பங்கேற்பது தொடர்பாக, மத்திய இணை அமைச்சருக்கும், அவரது மகளுக்கும் நடந்த உரையாடல், சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், கிரண் ரிஜிஜு, 47. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள், டில்லியில் உள்ள தனியார் ஆரம்பப் பள்ளியில் படித்து வருகிறார்.அமைச்சர் கிரணின் மகள் படிக்கும் பள்ளியில், சமீபத்தில், தாத்தா - பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக, தந்தையை அழைத்த மகள் கூறியதாவது:என் பள்ளியில் நடக்கும் விழாவில் நீங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அம்மா மட்டும் தான், எப்போதும் பள்ளிக்கு வருகிறார். நீங்கள் என் பள்ளி பக்கமே வருவதில்லை.அப்பா, இப்படி இருக்கலாமா? தாத்தா - - பாட்டி மட்டும், துாரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து உங்களைப் பார்க்க டில்லி வருகின்றனர். நீங்கள் மட்டும் ஏன் பள்ளிக்கு வருவதில்லை?இவ்வாறு, அவரது மகள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர், 'வர முயற்சி செய்கிறேன். எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. நான் என்ன செய்வது...' என, சமாளித்தார்.அதற்கு அந்த சிறுமி, 'உங்கள், 'பாஸ்' இடம், என் மகளின் பள்ளி விழாவில் பங்கேற்க செல்ல வேண்டுமென கூறுங்கள். அவர் கட்டாயம் அனுமதிப்பார்' என்றாள். மகளின் இந்த பேச்சை கேட்ட அமைச்சரின் மனம் நெகிழ்ந்து போனது. ஒரு நாள் விடுப்பு எடுத்து, மகளின் பள்ளி விழாவில் பங்கேற்றார்.மகளுடனான உரையாடலை, 'வீடியோ'வாக பதிவு செய்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அது தற்போது வேகமாக பரவி வருகிறது. .
No comments:
Post a Comment