காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, 'ஜாய் ஆப் கிவிங் வீக்' கொண்டாட, உடுமலை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு அக்., 3ம் தேதி நாளை வகுப்புகள் துவங்குகிறது.
விடுமுறை முடிந்து வரும் குழந்தைகளை உற்சாகமான சூழலில் வைத்துக்கொள்ள, பள்ளிகளில் 'ஜாய் ஆப் கிவிங் வீக்' எனப்படும், நன்னெறி நிகழ்ச்சிகளை கொண்டாட அரசு இரண்டாண்டுகளுக்கு முன், அறிவித்தது.
இதன்படி, பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டு, கல்வியாண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதில், விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் நாள் முதல், ஒரு வாரம் முழுமையாக இந்நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்பது, பெற்றோரை வணங்கச்செய்வது, உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு உதவுதல், பொருளாதார வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பண்புகளுக்கு, இந்த வாரம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உடுமலை கல்வி மாவட்டத்தில், காலாண்டு விடுமுறை முடிந்து வரும் குழந்தைகளை, இவ்வாறு நன்னெறி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்த வேண்டுமென வட்டார கல்வி அலுவலர் பிரிட்டோ, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment