புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கஜா புயல் நிவாரணம், சீரமைப்புப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை. இத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கான புத்தகங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொருத்து, அவர்களுக்கு மீண்டும் சிறந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். அதற்காகத்தான் இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய இயலாது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84,000 மாணவ, மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலனுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கஜா புயலால் சேதமடைந்த குடியிருப்புகளுக்கு தார்பாய்களும், இதர நிவாரண உதவிகளும் வழங்கப்படவுள்ளது என்றார் செங்கோட்டையன்
No comments:
Post a Comment